கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களுக்கு மிக இலகுவாக மீண்டும் தொற்றுக்குள்ளாகக்கூடிய வாய்ப்பு, மிக அவதானமாக செயற்படவும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களுக்கு மிக இலகுவாக மீண்டும் தொற்றுக்குள்ளாகக்கூடிய வாய்ப்பு, மிக அவதானமாக செயற்படவும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

கொவிட் வைரஸ் பரவல் மூன்றாம் அலையில் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களுக்கு, மிக இலகுவாக மீண்டும் தொற்றுக்குள்ளாகக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். அத்தோடு மணத்தை உணர்தல் உள்ளிட்ட சிக்கல்கள் ஆயுள் முழுவதும் தொடரக்கூடிய நிலையும் ஏற்படலாம். எனவே தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மூன்றாவது அலையில் பலவும் நிலைமாறிய வைரஸின் பாரதூர தன்மை யாதெனில் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையாகும்.

இவ்வாறு உயிரிழப்பவர்களுக்கு ஒட்சிசன் மற்றும் கொவிட் நிமோனியா நிலைமையே சிக்கலாகவுள்ளது. இவ்வாறு கொவிட் நிமோனியா நிலை ஏற்படும் போது, தொற்றுக்குள்ளானோருக்கு நீண்ட கால பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. சில சிக்கல்கள் ஆயுள் முழுவதும் காணப்படக் கூடியவையாகவுள்ளன.

மணத்தை உணரும் தன்மை அற்றுப்போதல் உள்ளிட்டவை வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியவை. எனவே தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குச் செல்பர்களின் உடல்நலன் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது. எனவே தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.

முதலாம் மற்றும் இரண்டாம் அலையில் தொற்றுக்குள்ளானவர்களை விட மூன்றாம் அலையில் தொற்றுக்குள்ளானவர்களுக்கு வெகு துரிதமாக மீண்டும் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே தொற்றிலிருந்து குணமடைந்து வீடு சென்றவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம், இதய பாதிப்பு உள்ளிட்ட சிக்கல்கள் மீண்டும் ஏற்படக்கூடும்.

கொவிட் என்பது சாதாரணமானதொரு விடயமல்ல. மிக அபாயமான கட்டத்திலேயே மக்கள் தற்போது உள்ளனர். எனவே தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் உயிருக்கு வைத்தியர்களால் வழங்கப்பட்டுள்ள உறுதிப்பாடு குறிப்பிட்ட காலத்திற்கு ஸ்திரமற்றதாகவே காணப்படும். எனவே தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment