இரு வேறு கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டார் ஜேர்மனியின் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கெல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

இரு வேறு கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டார் ஜேர்மனியின் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கெல்

உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவரான ஜேர்மனியின் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கெல் (Angela Merkel) இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளின் கலவை ஒரு நல்ல யோசனையாக இருக்கும் என்று மருந்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.

மேர்கெல் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜேர்மனியின் சான்ஸ்லர் பதவியில் இருந்து விலகவுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துள்ளன. எந்தவொரு தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக் கொள்கிறன்போது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதைத்தான் அனைவரும் பின்பற்றுகின்றனர்.

அதே நேரத்தில் முதலில் ஒரு டோஸ் தடுப்பூசியையும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியையும் போடுகின்றபோது, என்ன ஆகும் என்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. இதுபற்றியும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர்.

இந்த தருணத்தில் உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவரான ஜேர்மனியின் சான்ஸ்லர் 66 வயதான ஏஞ்சலா மேர்கெல் (Angela Merkel) இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

இவர் இங்கிலாந்தின் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா செனிகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசியை கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதல் டோஸ் தடுப்பூசியாக செலுத்திக் கொண்டார். (இந்தியாவில் இந்த தடுப்பூசி கோவிஷீல்ட் என்ற பெயரில் தயாரித்து வழங்கப்படுகிறது.)

அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதாகக் கூறி மார்ச் மாதத்தில், ஜேர்மனி பிற ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி போடுவதை நிறுத்தியது.

ஜேர்மனி முன்னர் தடுப்பூசி பயன்பாட்டை 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடை செய்திருந்தது, ஆனால் தற்போது அதை அனைத்து பெரியவர்களுக்கும் வழங்கத் தயாராக உள்ளது என்று ஜேர்மன் தொலைக்காட்சி சேவையொன்று தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த ஜேர்மனி அதிகாரிகள் பரிந்துரை செய்த நிலையில்தான் அவர் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

தற்போது அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். இதை அவரது செய்தி தொடர்பாளர் நேற்று உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், சமீபத்திய வாரங்களில் ஜேர்மனியில் தடுப்பூசி போடும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டது. நாட்டின் சனத் தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் தற்போது முதலாம் கட்ட கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா செனிகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசியை முதலிலும், 2 ஆவது டோசாக பைசர் தடுப்பூசியையும் போட்டுக் கொள்கின்றபோது அது பெரியவர்களிடம் லேசான அல்லது மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சில நாடுகள் குறிப்பிட்ட தடுப்பூசியின் வினியோக பிரச்சினைகள் காரணமாக இரு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டு, கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு மேம்படுவதை கவனித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad