மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கிறங்கி போராடும் நிலைமைக்கு ஆளாக்க வேண்டாமென கேட்டுக் கொள்கின்றோம் - பாலித ரங்கே பண்டார - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கிறங்கி போராடும் நிலைமைக்கு ஆளாக்க வேண்டாமென கேட்டுக் கொள்கின்றோம் - பாலித ரங்கே பண்டார

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்துக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து செல்கின்றது. அதனால் சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை பதிவிடுபவர்களை கைது செய்து, அதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கிறங்கி போராடும் நிலைமை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

புத்தளம் ஆணமடுவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் கட்சி காரியாலயத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மக்கள் விரக்தியடைந்து, அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கடுமையாக விமர்சிக்கும் நிலை நாளுக்குநாள் அதிகரித்து செல்கின்றது. சமூக வலைத்தளங்களில் பாரியளவில் விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக வலைத்தலங்களில் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களை வெளியிடுபவர்களை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இவ்வாறு அரசாங்கத்துக்கு எதிராக சமூக வலைத்தலங்களில் விமர்சனங்களை தெரிவித்திருக்கும் பலர் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வு பிரிவுனரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் கருத்துச் சுதந்திரம் அரசியலமைப்பினால் வழங்கப்பட்டிருக்கும் உரிமையாகும். அதனை பாதுக்காக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. ஆனால் இன்று அரசாங்கம் மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்காமல், பொய் குற்றச்சாட்டுக்களை பரப்பியதென்ற குற்றச்சாட்டில், அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றது.

இந்த நிலைமை தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கிறங்கும் நிலை ஏற்படும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால், அதனை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல்போகும். அதனால் அவ்வாறான நிலைமைக்கு மக்களை ஆக்க வேண்டாம் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம். 

ஏனெனில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையுடன் மக்கள் வீதிக்கிறங்கி போராடும் நிலைமை ஏற்பட்டால், கொவிட் தொற்றை கட்டுத்தவும் முடியாது போவதுடன் மக்களையும் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படும்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் சிவில் சட்டங்களையும் மீறிச் செல்லும் இடத்துக்கு மக்கள் செல்லலாம். அவ்வாறான நிலைமைக்கு இடமளிக்காமல், அரசாங்கம் அடக்குமுறைகளை கைவிட்டு, அரசியலமைப்பில் மக்களுக்கு இருக்கும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment