நாமல் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது, அரசாங்கத்தின் நல்லிணக்க நகர்வுகளுக்கு சிறந்ததொரு உதாரணமாக உள்ளது - செந்தில் தொண்டமான் - News View

Breaking

Post Top Ad

Thursday, June 24, 2021

நாமல் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது, அரசாங்கத்தின் நல்லிணக்க நகர்வுகளுக்கு சிறந்ததொரு உதாரணமாக உள்ளது - செந்தில் தொண்டமான்

சந்தேகத்தின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஆளும் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவுள்ள நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தியுள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது. அரசாங்கத்தின் நல்லிணக்க நகர்வுகளுக்கு சிறந்ததொரு உதாரணமாக இந்த விடயம் உள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக வாரியத்தின் இயக்குனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது, தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக வாரியத்தின் இயக்குனர் என்ற வகையில், இக்குழு பலமுறை கூடியுள்ளதுடன், தேசிய நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளை பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. 

நேற்றைய தினம் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு பாராளுமன்றில் வலியுறுத்தியிருந்தார். இந்த விடயத்தை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக வாரியத்தின் இயக்குனர் என்ற ரீதியில் முழுமையாக நான் வரவேற்கின்றேன். இதுவொரு ஆரோக்கியமான அறிவிப்பாகும்.

அரசாங்கமானது நாட்டின் தேசிய ஒற்றுமையை பலப்படுத்துவதற்காக பல முன்னுதாரணமான செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாக தற்போது அரசியல் கைதிகளின் விவகாரத்திலும் கவனம் செலுத்தியுள்ளது. விரைவில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை 2010 ஆம் ஆண்டு முதல் இ.தொ.கா சார்பில் நான் வலியுறுத்தி வருகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad