கடற் சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்பாரா? : கொள்ளையடிப்பது மாத்திரமே இந்த அரசாங்கத்தின் இலக்காகவுள்ளது : கொரோனா அச்சுறுத்தலிலும் ராஜபக்ஷ குடும்பம் அடுத்த அரச தலைவரை தயாராக்குகின்றது - கடுமையாக சாடியுள்ள மக்கள் விடுதலை முன்னணி - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

கடற் சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்பாரா? : கொள்ளையடிப்பது மாத்திரமே இந்த அரசாங்கத்தின் இலக்காகவுள்ளது : கொரோனா அச்சுறுத்தலிலும் ராஜபக்ஷ குடும்பம் அடுத்த அரச தலைவரை தயாராக்குகின்றது - கடுமையாக சாடியுள்ள மக்கள் விடுதலை முன்னணி

(எம்.மனோசித்ரா)

பேர்ள் கப்பலில் தீவிபத்து ஏற்படும் என்ற அபாயத்தை அறிந்திருந்தும் நஷ்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற குறுகிய நோக்கத்திலேயே அரசாங்கம் செயற்பட்டது. இதனால் தற்போது இலங்கையின் கடற் சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்றுக் கொள்வாரா என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொது செயலாளர் ரில்வின் சில்வா கேள்வியெழுப்பினார்.

நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கையின் கடற் சூழலை மாசடையச் செய்தமை, சீனாவின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக உரம் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, தடுப்பூசி அரசியல் உள்ளிட்டவை தொடர்பில் அமைதியைப் பேணாது, சகல விடயங்களுக்கு எதிராகவும் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பேர்ள் கப்பல் விவகாரத்தில் மாத்திரமின்றி எந்த விடயத்திலும் அரசாங்கம் விஞ்ஞானபூர்வமான தீர்மானங்களை எடுப்பதில்லை. மாறாக எவ்வாறு கொள்ளையடிப்பது அல்லது வருமானத்தை ஈட்டிக் கொள்வது என்பதில் மாத்திரமே கவனம் செலுத்தப்படுகிறது. அதன் காரணமாகவே பேர்ள் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தீப்பரவும் அபாயம் இருப்பதை அறிந்தும் அதனை எவ்வாறு அணைப்பது என்ற அறிவு கூட இல்லாமல் கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் எமது கடற்பரப்பு பாரியளவில் மாசடைந்துள்ளதோடு, மீன்வர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதன் மூலம் பெருந்தொகையான நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக காணப்பட்ட போதிலும், எமக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு உரிய நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையே தற்போது காணப்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதேவேளை சீனாவின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காகவே இரசாயன உர இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான உரிய மாற்று தீர்வை வழங்காமையினால் விவசாயிகள் பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இவற்றில் மாத்திரமின்றி மக்களின் உயிருடன் தொடர்புடைய கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திலும் முற்றுமுழுதான அரசியல் நோக்கமே காணப்படுகிறது.

வைத்தியத்துறை தொடர்பில் அரசாங்கத்தில் நிபுணத்துவம் உடையவர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே ஆகியோருக்கு முன்னுரிமையளிக்கப்படாமல் விடயத்தில் எவ்வித அனுபவும் துறையில் நிபுணத்துவமும் அற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை கண்காணிக்கின்றார்.

இதில் முற்றுமுழுதாக ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் நோக்கமே காணப்படுகிறது. நாட்டு மக்கள் கொவிட் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலும் கூட, ராஜபக்ஷ குடும்பம் அடுத்த அரச தலைவரை தயாராக்கிக் கொண்டிருக்கிறது.

இதேபோன்று சகல அமைச்சுக்களிலும் சிக்கல்களே காணப்படுகின்றன. இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் இவற்றை எதிர்பார்க்கவில்லை. அந்த மக்களின் எதிர்பார்ப்பாகக் காணப்பட்ட நாட்டின் பாதுகாப்பை புறந்தள்ளிவிட்டு, நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பதிலேயே ஜனாதிபதியின் முழுக் கவனமும் இருக்கிறது.

அனைத்து வேலைத்திட்டங்களிலும் எவ்வாறு கொள்ளையடிப்பது என்பது மாத்திரமே இந்த அரசாங்கத்தின் இலக்காகவுள்ளது. எனவே இனியாவது முற்போக்கான ஆட்சியாளர்களை தெரிவு செய்யுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறில்லை எனில் எதிர்காலத்தில் கடல், நிலம் மற்றும் மக்களின் உயிர் என எதுவுமே அற்ற பூமியாக இலங்கை மாறிவிடும்.

பேர்ள் கப்பலுக்கு அனுமதி வழங்க முன்னர் அதில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க முடியுமா என்று சிந்தித்திருக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் இரண்டாவது தெரிவாக தீ முழுக்கப்பலிலும் பரவ முன்னர் அதனை ஆழ் கடல் நோக்கி தள்ளிச் சென்றிருக்க முடியும்.

ஆனால் இது குறித்த எவ்வித அறிவும் முன் ஆயத்தமும் இன்றி அந்த சவாலை ஏற்றுக் கொண்டமை நஷ்ட ஈட்டை இலக்காகக் கொண்டேயாகும். இதனால் தற்போது இலங்கை கடற்பரப்பிற்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கான பொறுப்பினை ஜனாதிபதி ஏற்றுக் கொள்வாரா என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad