அனர்த்த நிலைமை படிப்படியாக சீரடைந்து வருவதாக அறிவிப்பு : வெள்ளம் வடிகிறது; ஆறுகளின் நீர் மட்டமும் குறைவடைகிறது - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

அனர்த்த நிலைமை படிப்படியாக சீரடைந்து வருவதாக அறிவிப்பு : வெள்ளம் வடிகிறது; ஆறுகளின் நீர் மட்டமும் குறைவடைகிறது


மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பெய்த மழையின் பின்னர் ஏற்பட்ட அனர்த்த நிலைமை படிப்படியாக சீரடைந்து வருவதாகவும் வெள்ளம் படிப்படியாக வடிந்து வருவதாகவும் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழையைத் தொடர்ந்து அதிகரித்த ஆறுகளில் நீர்மட்டம் தற்போது குறைந்துள்ளது. எனினும் களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் இருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனர்த்த நிலைமை படிப்படியாக குறைந்து வருகின்ற போதிலும் ஆறுகளில் மேற்பகுதி நீரேந்து பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்தால் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜி.வி. சுகிஸ்வர பொதுமக்களை கேட்டுள்ளார்.

குறிப்பாக களுகங்கை, களனிகங்கை, அத்தனகல்ல ஓயா ஆகிய ஆறுகளின் மேற் பிரதேசங்களில் நேற்று குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்லை. அதனால் வெள்ளம் ஏற்படுவதற்கான ஆபத்து தற்போது நீங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் சீரற்ற காலநிலையினால் இதுவரை 17 பேர் உயிரிழ்ந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் காணாமல் போயுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (07) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் 271,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 935 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment