கப்பல் தீ விபத்து குறித்து இன்று நீதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் : ஆழ்கடலுக்கு கொண்டு சென்றால் மாத்திரமே பாதிப்பை குறைக்க முடியும் - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

கப்பல் தீ விபத்து குறித்து இன்று நீதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் : ஆழ்கடலுக்கு கொண்டு சென்றால் மாத்திரமே பாதிப்பை குறைக்க முடியும்

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை நீதியமைச்சில் இடம் பெறவுள்ளது.

இப்பேச்சுவார்த்தையில் துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள், சமுத்திர வள பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள், சூழலியலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தீ விபத்துக்குள்ளாகியுள்ள கப்பலினால் நாட்டின் கடல் வளத்திற்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து பல்வேறு தரப்பினர் கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். 

இந்த ஆய்வு நடவடிக்கைகளின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் இப்பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் தேசிய நீர் வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்னராஜ தெரிவிக்கையில், தீ விபத்துக்குள்ளாகியுள்ள கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு கொண்டு சென்றால் மாத்திரமே கடல் வளத்திற்கு ஏற்படவுள்ள பாதிப்பை குறைக்க முடியும். பல்வேறு காரணிகளினால் தற்போது கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு இழுத்துக் செல்லும் நடவடிக்கை தடைப்பட்டுள்ளன.

கப்பல் விபத்துக்குள்ளான காலப்பகுதியில் இருந்து ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். கப்பலில் இருந்து வெளியாகிய பிளாஸ்டிக் மூலப் பொருட்களை உட்கொண்டதால் கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன.

கப்பல் தீ விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து மணல் மற்றும் நீர் ஆகியவற்றின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. நீரின் பி.எச் பெறுமானத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. 

கடந்த 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் முதற்கட்ட சான்றினை நீதியமைச்சர் தலைமையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்தையில் முன்வைக்கவுள்ளோம்.

மீன் உண்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இறந்து கரையொதுங்கிய மீன்களின் உடல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதன்போது புற்றுநோய் ஏற்படுத்தும் விசத்தன்மை ஏதும் காணப்படவில்லை. ஆகவே போலியான செய்திகள் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad