கொழும்பு துறைமுக நகரத்தை மையப்படுத்தி 5 ஆண்டு காலப்பகுதிக்குள் குறைந்தப்பட்சம் 15 பில்லியன் டொலர் முதலீடுகளை பெற்றுக் கொள்ள திட்டம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

கொழும்பு துறைமுக நகரத்தை மையப்படுத்தி 5 ஆண்டு காலப்பகுதிக்குள் குறைந்தப்பட்சம் 15 பில்லியன் டொலர் முதலீடுகளை பெற்றுக் கொள்ள திட்டம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுக நகரத்தை மையப்படுத்தி எதிர்வரும் 5 ஆண்டு காலப்பகுதிக்குள் குறைந்தப்பட்சம் 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை (இலங்கை மதிப்பில் ரூபா 2,962,24,50,00,000) பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான சட்டம் மற்றும் வியாபார வசதிகள் ஆகியவற்றுக்கு தேவையான வரைபு புதிய சட்ட மூலத்தின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் பொருளாதாரத்தை குறுகிய காலத்திற்குள் மேம்படுத்த முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டு பேரவை -2021 மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முதலீட்டு சபை, கொழும்பு பங்குச்சந்தை, மற்றும் இலங்கை வணிக சபை ஆகிய நிறுவனங்கள் ஒன்றினைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் கலந்துக் கொள்வது மகிழ்வுக்குரியது.

2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டின் அபிவிருத்தி எத்தன்மையில் காணப்பட்டது என்பதை அனைவரும் அறிவீர்கள். அக்காலக்கட்டத்தில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல நெருக்கடிகள் காணப்பட்டன. இவ்வாறான சூழ்நிலையில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 24 பில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 79 பில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 வரையிலான காலப்பகுதியில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 82 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டது.தேசிய பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது. புதிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் பல்வேறு காரணிகளினால் தடைப்பட்டன.

2020 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்றும் போது பூகோள மட்டத்தில் தாக்கம் செலுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் பெருந்தொற்று சவால்களையும் எதிர்க் கொள்ள நேரிட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து பொது மக்களை பாதுகாக்க 66 நாட்கள் நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக அனைத்து வியாபார துறைகளும் பல நெருக்கடிகளை எதிர்க் கொண்டது. பூகோளிய மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் சவால்களை எதிர்க் கொள்ள வேண்டியுள்ளன.

2020ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி வீதம் நூற்றுக்கு 3.6 வீதத்தால் குறைவடைந்தது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 80 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்தது. இருப்பினும் மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் பல திட்டங்களை நெருக்கடியான சூழ்நிலையிலும் செயற்படுத்தியுள்ளது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும். ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி,அனைவருக்கும் தூய்மையான குடிநீர், புதிய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி, புதிய தொழிற்சாலை உருவாக்கம் என பல அபிவிருத்தி செயற்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மக்கள் மத்தியில் நாணய பயன்பாடு அதிகரிக்கும் வகையில் அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை துறைமுக வலயங்களில் அதிக தொழிற்துறையை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் நாட்டில் பல பிரதேசங்களில் தற்போது உருவாக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி பணிகளை முன்னெக்க தேவையான சட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.நாட்டின பொருளாதாரத்தை மேம்படுத்தும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஒருமுகப்படுத்துவது பிரதான இலக்காகும்.

தற்போது தேசிய பொருளாதாரத்தில் வளர்ச்சி 6 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மூலதன முதலீட்டை அதிகரிப்பது அவசியமாகும். உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதுடன் தேசிய பொருளாதார உற்பத்தி வளர்த்தியை விரிவுப்படுத்த பல்வேறு முதலீடுகளை ஊக்குவித்தல் பிரதானவையாகும்.

இதற்காக மூலதன செலவு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதலீகளை ஊக்குவிப்பதற்கும் பல வழிமுறைகளில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவு திட்டத்தில் படகு தயாரித்தல்,கொள்கலன் , மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட துறைகளின் முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கல்,நிதி மற்றும் நிதி அல்லாத செயற்திட்டங்கள் அறிமுகம், உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுக நகரத்தை மைப்படுத்தி எதிர்வரும் 5வருட காலத்திற்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர் கவர்ச்சிகரமான முதலீடுகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். அதற்கான வசதிகள், சட்ட ஒழுங்கு முறைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை வெற்றிக் கொள்வதுடன் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். உலகின் உயர்மட்ட முதலீடுகள் எமக்கு கிடைக்கப் பெறும்.

தற்போதைய சூழ்நிலையில் அரசமுறை கடன் பெறுவதை காட்டிலும், கடன் அல்லாத வெளிநாட்டு முதலீடுகளை பெறுவது எமது பிரதான இலக்காகும்.இதற்கமைய தனியார் துறை,பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், கடன் வழங்கு தாரர்கள், புதிய வியாபார செயற்பாட்டாளார்கள், ஆகிய தரப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad