இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான கப்பலிலிருந்து கரையொதுங்கிய கழிவுகள் 40 கொள்கலன்களில் சேகரிப்பு..! - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான கப்பலிலிருந்து கரையொதுங்கிய கழிவுகள் 40 கொள்கலன்களில் சேகரிப்பு..!

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கழிவுகள் கரையொதுங்கிய 129 இடங்கள் இதுவரையில் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளிலிருந்து 40 கொள்கலள்களில் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கொள்கலனின் எடை 20 தொன் எனவும் கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹண்டாபுர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மே மாதம் 26 ஆம் திகதி முதல் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து பொருட்கள் கரையொதுங்கிய 129 இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சில இடங்களில் கடல் அலையினால் மீண்டும் மீண்டும் பொருட்கள் கரையொதுங்குவதால் அவ்வாறான இடங்களை தினமும் தூய்மைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தூய்மைப்படுத்தும் பணிகளில் முப்படையினர் உள்ளிட்ட ஏனைய குழுக்களைச் சேர்ந்த 6,400 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரையில் 40 கொள்கலன்களில் கரையொதுங்கிய பொருட்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு கொள்கலனின் எடை 20 தொன் ஆகும். அதற்கமைய இதுவரையில் எந்தளவிற்கு கழிவுகள் சேமிக்கப்பட்டுள்ளன என்பதை கணிப்பிட முடியும்.

கப்பலின் பெருமளவான பகுதி கடலில் மூழ்கியுள்ளதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் கப்பல் தற்போதுள்ள கடற்பகுதியில் பாரியளவில் கழிவுகளோ அல்லது எண்ணெய் படலமோ இதுவரையில் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

எவ்வாறிருப்பினும் கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஏனைய நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்த தயாராகவுள்ளன என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad