அல்வாயில் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் : தப்பி ஓடிய இளைஞரை கைது செய்ய நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

அல்வாயில் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் : தப்பி ஓடிய இளைஞரை கைது செய்ய நடவடிக்கை

அல்வாயில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோர் முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளியை பேணாமலும் ஒன்று கூடி வேள்வி மற்றும் பொங்கல்களை நடாத்திய சம்பவத்தை அடுத்து விறுமர் கோவில் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அல்வாய் வடக்கு விருமார் கோவில் பொங்கல் மற்றும் வேள்வி நிகழ்வை 500 பேருக்கு மேற்பட்டவர்களுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் நடத்தியுள்ளனர்.

சுகாதார பிரிவினரின் அனுமதிகள் எதுவும் பெறப்படாது இவ்வாறு அதிக எண்ணிக்கையில் பக்தர்களை ஒன்று கூட்டி கொரோனா வைரஸ் பரவலுக்கு ஏதுவான நிலையைத் தோற்றுவித்தமை தொடர்பாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர்களும் பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசாரணையில் சட்ட விதிமுறைகளை மீறுவதற்கு காரணமாக இருந்த கோவில் நிர்வாகியும் அதனோடு இணைந்து செயல்பட்ட ஏனைய 30 பேரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன் ஆலய நிர்வாகி மீது பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவ இடத்தில் பொது சுகாதார பரிசோதகர்களினதும் பொலிஸாரினதும் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் விடுத்த அப்பகுதி இளைஞர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளை அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அவர் தொடர்பான காணொளி மற்றும் ஒளிப்பட ஆதாரங்களை கொண்டு அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு பொதுமக்கள் பொறுப்பற்ற விதமாக ஒன்றுகூடல்களை மேற்கொள்வதால் அதிகளவான நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு தேவையற்ற இழப்புகளை சமூகம் எதிர்நோக்க வேண்டி வரும் என சுகாதாரத் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment