இலங்கையில் சீரற்ற காலநிலையால் இலட்சத்து 19,027 பாதிப்பு : 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு : களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

இலங்கையில் சீரற்ற காலநிலையால் இலட்சத்து 19,027 பாதிப்பு : 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு : களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கடந்த மூன்று நாட்களாக சீரற்ற காலநிலை நிலவுகின்ற நிலையில் மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு சீரற்ற காலநிலையால் இதுவரையில் கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா மற்றும் கேகாலை ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி
கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவில் தெவனகல கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை அதிகாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

மண் சரிவில் சிக்கிய இக்குடும்பத்தைச் சேர்ந்த 57 வயதுடைய தந்தை, 56 வயதுடைய தாய் மற்றும் 23 வயதுடைய மகள் மற்றும் 29 வயதுடைய மகன் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்க்கப்பட்டனர். மேற்கு பாதுகாப்புபடை தலைமையகத்தின் இராணுவத்தினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை கேகாலை மாவட்டம், வரகாப்பொல பிரதேச செயலகப் பிரிவில் அல்கம கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடொன்றில் நேற்று மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்கி காணாமல் போன 72 வயதுடைய ஆணொருவரும் சடலாமாக மீட்க்கப்பட்டுள்ளார். 

எனினும் குறித்த வீட்டிலுள்ள ஏனைய அங்கத்தவர்கள் இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளியன்று 4 பேர் பலி
நேற்று வெள்ளிக்கிழமை சீரற்ற காலநிலையால் 4 பேர் உயிரிழந்தனர். இரத்தினபுரி அயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி மண் சரிவில் சிக்கி உயிரிழந்ததோடு, புத்தளம் - மாம்பே மகுணுவட்டவன கிராம உத்தியோகத்தர் பிரிவில் 21 வயதுடைய இளைஞன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதேபோன்று களுத்துறை மில்லனிய பிரதேசத்தில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதோடு, இரத்தினபுரி - அயகம கெப்பிட்டிபொல கிராம உத்தியோகத்தர் பிரிவில் 43 வயதுடைய ஆணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காணாமல் போனோர் மீட்க்கப்படவில்லை
நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்டத்தில் மஹவெள பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 15 வயது சிறுவனொருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். எனினும் குறித்த சிறுவன் சனிக்கிழமை மாலை வரை மீட்க்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இரத்தினபுரி மாவட்டம் - அயகம, மெதபொல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி காணாமல் போன நபரும் மாலை வரை மீட்க்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

2,19,027 பேர் பாதிப்பு
அதற்கமைய இன்று மாலை வரை சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 45,380 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 19,027 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 1,275 குடும்பங்களைச் சேர்ந்த 5,375 நபர்கள் 39 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, 6,12 குடும்பங்களைச் சேர்ந்த 2,471 நபர்கள் பாதுகாப்பிற்காக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மண்சரிவு உள்ளிட்டவற்றால் இதுவரையில் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர, அகலவத்த, மத்துகம, வலல்லாவிட்ட மற்றும் ஹொரனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண் சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இரத்தினபுரி மாவட்த்தில் எஹலியகொட, கலவான, அயகம, குருவிட்ட எலபாத்த, நிவித்திகல, கிரியெல்ல, இரத்தினபுரி போன்ற பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் பிட்பத்தர பிரதேச செயலப் பிரிவு, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலக பிரிவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் சீதாவக்க பிரதேச செயலக பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியாந்தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகல, புளத்கொஹூபிட்டிய, தெஹியோவிட்ட, ரம்புக்கனை, அரநாயக்க மற்றும் வரகாப்பொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கும் தேசிய கட்டட ஆராய்வு நிறுவகம் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை நீடித்துள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் அம்பன்கங்க, பல்லேபொல மற்றும் யட்டவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியாவில் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிற்கும் மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் 125 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதால் இன்று மாலை 8.30 மீற்றர் வரை உயர்வடைந்திருந்த நீர்மட்டம் 9 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மேலும் அதிகரிக்கும் என்று நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய களனி கங்கையை அண்மித்த தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவாக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளுக்கும் வெள்ளம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதிகளிலுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை அத்தனகலு ஓயாவில் நீர் மட்டம் உயரும் பட்சத்தில் அத்தனகல்ல, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயாவை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடும். 

களுகங்ககையில் நீர் மட்டம் உயரும் பட்சத்தில் ஹொரனை, அகலவத்தை, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்கள, தொடங்கொட, மில்லனிய, மதுராவல மற்றும் களுத்துறை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும்.

மகா ஓயாவில் நீர் மட்டம் அதிகரித்தால் அலவ்வ, திவுலபிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மகாஓயாவை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நீர் தேக்கங்களில் 8 வான் கதவுகள் திறப்பு
100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக 3 நீர் தேக்கங்களில் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய குகுலே நீர் தேக்கத்தில் 3 வான் கதவுகளும், தெதுருஓயா நீர் தேக்கத்தில் 4 வான் கதவுகளும், லக்ஷபான நீர் தேக்கத்தில் ஒரு வான் கதவும் திறக்கப்பட்டுள்ளன.

மழைவீழ்ச்சி
இதேவேளை இன்று கேகாலை மாவட்டத்திலேயே அதிக மழை வீழச்சி பதிவாகியது. இம்மாவட்டத்தில் அல்கம என்ற பிரதேசத்தில் 24 மணித்தியாலங்களுக்கும் 197.5 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை கலிகமுவ பிரதேசத்தில் 132 மி.மீ, பஸ்யால பிரதேசத்தில் 130 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் 75 மி.மீ மழை வீழ்ச்சியும் மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேலைகளில் மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment