தீக்கிரையாகிய நிலையில் மூழ்கி வரும் கப்பல் தொடர்பில் 15 பேர் கொண்ட சிறப்பு குழு தீவிர விசாரணை - News View

Breaking

Post Top Ad

Saturday, June 5, 2021

தீக்கிரையாகிய நிலையில் மூழ்கி வரும் கப்பல் தொடர்பில் 15 பேர் கொண்ட சிறப்பு குழு தீவிர விசாரணை

(செ.தேன்மொழி)

கொழும்பு துறைமுக கடல் பரப்பில் 9.5 கிலோ மீட்டர் தொலைவில் தீக்கிரையாகிய நிலையில் மூழ்கி வரும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் அரச இரசயான பரிசோதகர் திணைக்கள அதிகாரிகள், கப்பல் வர்த்தகம் தொடர்பான பணிப்பாளர், குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர், பணிபாளர் உள்ளிட்ட ஆறு பேரைக் கொண்ட குழுவினர் மற்றும் குற்றவியல் ஸ்தல பரிசோதகர் பிரிவின் புகைப்பிடிப்பாளர்கள், கடற்படையினர் ஆகியோர் உள்ளடங்களாக 15 பேரை கொண்ட குழுவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கப்பல் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகளுக்காக மாதிரிகள் மற்றும் புகைப்படங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பிரதானியிடம் பெறப்படும் வாக்கு மூலத்தின் ஊடாகவே தீர்மானமிக்க பல தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொழும்பு துறைமுக கடல் பரப்பில் 9.5 கிலோ மீட்டர் தொலைவில் தீக்கிரையாகிய நிலையில் மூழ்கி வரும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுக்கமைய 15 பேரைக் கொண்ட சிறப்பு குழுவொன்று கப்பலின் அருகில் சென்று பரிசோதனைகளை செய்துள்ளது.

இதன்போது அரச இரச பரிசோதகர் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள், கப்பல் வர்த்தகம் தொடர்பான பணிப்பாளர், குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர், பணிபாளர் உள்ளிட்ட ஆறு பேரைக் கொண்ட குழுவினர் மற்றும் குற்றவியல் ஸ்தல பரிசோதகர் பிரிவின் புகைப்பிடிப்பாளர்கள் இருவர், கடற்படையினர் உள்ளடங்களாக 15 பேரை கொண்ட குழுவினரே இவ்வாறு பரிசோதனைகளை செய்துள்ளனர்.

தீக்கிரையாகி தற்போது கடலில் முழ்கி வரும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அருகில் சென்ற விசாரணை குழுவினர், பரிசோதனை நடவடிக்கைகளுக்கு அவசியமான மாதிரிகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன், குற்றவியல் ஸ்தல பரிசோதகர் பிரிவின் புகைப்பிடிப்பாளர்கள், கப்பல் மற்றும் அதன் அண்மித்த பகுதிகளை புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதன்போது விசாரணைக்குழுவினர் தங்களுக்கு அவசியமான தரவுகளை சேகரித்துக் கொண்டு நேற்றுமுன்தினம் பிற்பகல் 1 மணியளவில் மீண்டும் கரைக்கு வந்துள்ளதுடன், அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் 16 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. எனினும் கப்பலின் பிரதானியிடம் பெறப்படும் வாக்குமூலத்தின் பிரகாரமே தீர்மானம் மிக்க பல தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அவரே கப்பலில் ஏற்றி வரப்பட்ட கொள்கலன்களை ஒழுங்கு படுத்தும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். அதனால் இரசாயனம் அடங்கப்பட்ட கொள்கலன்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அவரிடம் பெறப்படும் வாக்குமூலங்கள் ஊடாக அறிந்துக் கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad