நூற்றுக்கும் மேற்பட்ட GS பிரிவுகள் முடக்கம், அரசாங்கம் மக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது, ஒரு வாரத்தில் ஏற்பட்ட 100 மரணங்களுக்கு மக்களது கவனயீனமே காரணம் - இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

நூற்றுக்கும் மேற்பட்ட GS பிரிவுகள் முடக்கம், அரசாங்கம் மக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது, ஒரு வாரத்தில் ஏற்பட்ட 100 மரணங்களுக்கு மக்களது கவனயீனமே காரணம் - இராணுவத் தளபதி

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக நேற்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளன. நேற்றும் 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நேற்றும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க தேவையான சகல நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பரவலை தடுக்கும் நோக்குடனே சில பிரதேசங்களை முடக்கி வருவதாகவும் மக்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

அதேவேளை கடந்த வாரம் மாத்திரம் நூற்றுக்கு மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மரணமடைந்துள்ள நிலையில் நோயாளர்களின் கவனயீனம் காரணமாகவே அதில் பெரும்பாலான மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமக்கு வைரஸ் தொற்று இருப்பதை தெரிந்து கொண்டும் பெருமளவிலானோர் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் நோய் உக்கிரமடைந்த பின்னரே மருத்துவரை நாடுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் நோயாளிகளை பாதுகாப்பது பெரும் கஷ்டமாகிவிடும். மறுபுறம் வைரஸ் தொற்று நோயாளர்கள் என இனங்காணப்பட்டுள்ள பலர் மறைந்து வாழ்வதாலும் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத் தளபதி மேலும் தெரிவிக்கையில், நேற்றுக் காலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பொலிஸ் நிர்வாகப் பிரிவிலுள்ள 13 கிராம சேவகர் உத்தியோகத்தர் பிரிவுகளும் இறக்குவானை பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளும் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிர்வாகப் பிரிவில் நாரம்பிட்டிய கிராம சேவகர் உத்தியோகத்தர் பிரிவு நேற்றுக் காலை முதல் தனிமைப்படுத்தல் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இரத்தினபுரி மாவட்டத்தில் தொலேகந்த, றம்புக்க, கத்லான, தனவெல, இலும்புக்கந்த, பொதுப்பிட்டிய தெற்கு, பானாபொல, குடுமிரிய, குடவ, தெல்கொட, தவகலகம, கங்கலங்கமுவ, கொஸ்வத்த, தபஸ்சர, வந்துராவ, வெம்பியகொட, வெத்தாகல கிழக்கு வெத்தாகல மேற்கு, கலவானை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தின் சென். கூம்ஸ் தோட்டம் ஆகிய பிரதேசங்களே நேற்றையதினம் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் 14 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க கொழும்பு மாவட்டத்தில் 24 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள், மொனராகலை மாவட்டத்தில் 06 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள், மாத்தளை மாவட்டத்தில் இரண்டு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள், காலி மாவட்டத்தில் ஒன்பது கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள், பொலன்னறுவை மாவட்டத்தில் இரண்டு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள், கம்பஹா மாவட்டத்தில் 20 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள், களுத்துறை மாவட்டத்தில் 28 கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவு, திருகோணமலை மாவட்டத்தில் 10 கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவு, குருநாகல் மாவட்டத்தில் 23 கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தில் 10 கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தில் 5 கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவு, யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவு ஆகிய பிரதேசங்களே தனிமைப்படுத்தலுக்காக இதுவரை முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களாகுமென்றும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment