காணாமல் போனவர்களது உறவுகள் மத அஞ்சலி செலுத்துவதை யாரும் தடுக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் - News View

Breaking

Post Top Ad

Sunday, May 2, 2021

காணாமல் போனவர்களது உறவுகள் மத அஞ்சலி செலுத்துவதை யாரும் தடுக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ்

இறந்தவர்கள், அல்லது கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களது உறவுகள் அவர்களை நினைவுப்படுத்துவது அல்லது அவர்களுக்கு மத அஞ்சலி செலுத்துவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலாக இருக்கலாம், அல்லது பாராளுமன்ற தேர்தலாக இருக்கலாம், நான் மக்களிடம் கேட்டது எனக்கு கூடிய வாக்குகளையும், ஆசணங்களையும் கொடுத்தால் மக்கள் எதிர்கொள்ளுகின்ற சகலவிதமான பிரச்சினைகளும், அரசியல், அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சினைகளாக இருக்கலாம், மிக குறுகிய காலத்திற்குள் தீர்வு பெற்றுத்தருவேன் என கூறினேன்.

துரதிஸ்டவசமாக எனது கருத்து போதிய அளவு மக்களிற்கு சென்றடையவில்லையோ அல்லது, மக்கள் அதற்கு செவிசாய்க்கவில்லையோ என்பது எனக்கு தெரியாது.

பிரச்சினைகளைவிட, பிரச்சினைகளிற்கு கை, கால், மூக்கு வைத்து வருவதுதான் அதிகமாக இருக்கின்றது. அண்மையில் கூட கல்முனை பிரதேச சபையில் நீண்ட காலமாக ஒரு பிரச்சினை சென்று கொண்டிருந்தது. அப்போது கல்முனை பிரதேச சபையின் பெயர் பலகை இடப்பட்டது. பின்னர் அது அகற்றப்பட்டு உதவி பிரதேச செயலகம் என மாற்றப்பட்டுள்ள சம்பவமாகும்.

அண்மையில் ஜனாதிபதி, ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது குறித்த பிரச்சினையை அவர்களே முன்கொண்டுவந்து இது அதிகாரிகளின் பிழை என அவர்களாகவே இப்பிரச்சினையை கூறினர். அதுபோன்று வெவ்வேறான இவ்வாறு பிரச்சினைகள் காணப்படுவதாக அவர்கள் குறைபட்டுக் கொண்டார்கள்.

தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்றிருக்கின்றவர்கள் அல்லது பொய் வாக்குறுதி கொடுத்து அதனை அபகரித்துக் கொண்டிருக்கின்றவர்கள் சரியாக இந்த பிரச்சினையை கையாளவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

முள்ளிவாய்க்கால் நினேவேந்தலை தடுக்கும் வகையில் கொவிட்19 என்ற விடயத்தை திணிக்க முற்படுவதாக பொதுவாக பேசப்படுகின்றது. இது தொடர்பில் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என அமைச்சரிடம் ஊடகவியலாளர் வினவினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், கொவிட் பரவலின் நிலை இருக்கின்றது. நாடு முழுவதும் வணக்கஸ்தலங்கள் அனைத்திலும் இவ்வாறு தடைகளை விதித்துள்ளது. ஆனால் அது நல்ல நோக்கத்தோடு. அதாவது இந்த பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இவ்வாறு தடைகளை விதித்துள்ளது.

அது இலங்கையில் மாத்திரமல்ல, உலகலாவிய ரீதியில் இந்த நிலை இருக்கின்றது. அதனால் இலங்கையும் அந்த இலக்கை நோக்கி போகலாம்.

ஆனால் இங்கு இருக்கக்கூடிய விசேட அரசியல் பிரச்சினை என்னவென்றால், இறந்தவர்கள், அல்லது கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களது உறவுகள் அவர்களை நினைவுப்படுத்துவது அல்லது அவர்களிற்கு மத அஞ்சலி செலுத்துவதை யாரும் தடுக்க முடியாது. எந்த இடத்தில் எங்கு நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் தமது வீடுகளில் இவ்வாறு செய்வதை யாரும் தடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad