தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஏற்படுத்தப்படும் இடையூறுகள், ஒட்டு மொத்த செயற்திட்டத்தையும் பொருளாதார மீட்சியையும் வெகுவாகப் பாதிக்கும் : மருத்துவ நிபுணர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 29, 2021

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஏற்படுத்தப்படும் இடையூறுகள், ஒட்டு மொத்த செயற்திட்டத்தையும் பொருளாதார மீட்சியையும் வெகுவாகப் பாதிக்கும் : மருத்துவ நிபுணர்கள் சங்கம்

(நா.தனுஜா)

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஏற்படுத்தப்படும் இடையூறுகள், இந்த ஒட்டு மொத்த செயற்திட்டத்தையும் பொருளாதார மீட்சியையும் வெகுவாகப் பாதிக்கும். எனவே இனியேனும் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஒரு சீரான திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது நாடளாவிய ரீதியில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அண்மையில் மொரட்டுவை நகர சபை மேயரின் தலையீட்டினால் அப்பகுதியில் தடுப்பூசி வழங்கலில் குழப்பம் ஏற்பட்டது. 

எனினும் அந்த நெருக்கடியை தைரியமாக எதிர்கொண்ட சுகாதார மருத்துவ அதிகாரியைப் பாராட்டும் அதேவேளை, இது விடயத்தில் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் உரியவாறு செயற்படுவதை உறுதி செய்வதற்குத் தவறிய சட்ட அமுலாக்க அதிகாரிகளைக் கண்டிக்கின்றோம்.

தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகளின் போது குருணாகல் மற்றும் காலி ஆகிய இடங்களிலும் அரசியல்வாதிகளின் இத்தகைய மோசமான தலையீட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இரண்டாம் கட்ட அஸ்ராசெனேகா தடுப்பூசி வழங்கலின்போதும் சுகாதாரத் துறையில் உள்ள அதிகாரம் மிக்க தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். 

எனவே தடுப்பூசி வழங்கலின்போது அரசியல் அல்லது தொழிற்சங்கப் பின்புலம் கொண்டவர்கள் இத்தகைய முறையற்ற தலையீடுகளில் ஈடுபடுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தடுப்பூசி மிகவும் அவசியமானவர்கள் யார் என்பதை இனங்கண்டு, முக்கியத்துவத்தின் அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கான செயற்திட்டம் உரிய அதிகாரிகளால் முன்னெடுக்கப்படாது விட்டால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை எம்மால் எதிர்வுகூற முடியும்.

மேலும், இந்த கொரோனா வைரஸ் பரவலில் இருந்து முழுமையாக மீண்டு, பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக இருக்கின்ற இறுதி வழிமுறை இதுவேயாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment