உழைக்கும் வர்க்கத்தினரது சுகாதார நலனை கருத்திற் கொண்டே மே தின கூட்டங்களை அரசாங்கம் இரத்து செய்தது - அமைச்சர் தினேஷ் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 2, 2021

உழைக்கும் வர்க்கத்தினரது சுகாதார நலனை கருத்திற் கொண்டே மே தின கூட்டங்களை அரசாங்கம் இரத்து செய்தது - அமைச்சர் தினேஷ்

இராஜதுரை ஹஷான்

உழைக்கும் வர்க்கத்தினரது சுகாதார நலனை கருத்திற் கொண்டே மே தின கூட்டங்களை அரசாங்கம் இரத்து செய்தது. கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்துள்ளது. கொவிட்-19 வைரஸ் காலத்தில் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன. தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், செல்வந்த வர்க்கத்தினரது கோரிக்கைக்கு அடிபணிந்து மே தின கூட்டங்கள், பேரணிகள் இரத்து செய்யப்படவில்லை. அதற்கான தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது. கொவிட்-19 வைரஸ் தாக்கம் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு மே தின கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டன.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்து அரசாங்கங்களை காட்டிலும் தற்போதைய அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தொழிலாளர் நலன் பேணும் சட்டங்கள் தற்போதைய கால தேவைக்கு ஏற்ப திருத்தியமைக்கப்பட்டுள்ள, புதிதாக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

பூகோளிய மட்டத்தில் தாக்கம் செலுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் சர்வதேச மட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைமை இலங்கையில் ஏற்படவில்லை. 

அரச மற்றும் தனியார் துறையில் சேவையாற்றும் ஊழியர்களின் தொழில் உரிமை குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தொழிலாளர்களை சேவையில் இருந்து விலக்காமல் அவர்களுக்கு பகுதியளவேனும் சம்பளம் வழங்க வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்தது.

தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் உழைக்கும் வர்க்கத்தினரது சேவை அளப்பரியது. தற்போது தாக்கம் செலுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க தொழிலாளர்கள் பொறுப்புடன் செயற்படுகிறார்கள். அவர்களின் ஒத்துழைப்பின் ஊடாகவே தற்போதைய நெருக்கடி நிலையை சீர் செய்ய முடியும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நெடுநாள் கோரிக்கையினை அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். மலையக மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும். 

அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் சேவை மையங்களில் தற்போது காணப்படும் பணி வெற்றிடங்களுக்கு சேவையாளர்களை இணைத்துக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment