அரசாங்கத்தின் செயற்பாட்டினால் தேசிய பாதுகாப்பு சர்வதேசத்தின் மத்தியில் பாரிய அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது - நளின் பண்டார - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் தேசிய பாதுகாப்பு சர்வதேசத்தின் மத்தியில் பாரிய அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது - நளின் பண்டார

(எம்.மனோசித்ரா)

மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1977 இல் திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி இந்தியாவை கோபப்படுத்தியதால் 30 ஆண்டு கால யுத்தத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்தது. சீனாவுடன் தேவைக்கதிகமான தொடர்புகளைப் பேணுவதன் மூலம் தற்போதைய அரசாங்கமும் இந்தியாவை கோபப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டின் காரணமாக தேசிய பாதுகாப்பு சர்வதேசத்தின் மத்தியில் பாரிய அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இலங்கையின் இறையான்மைக்கு முரணாக துறைமுக நகர சட்ட மூலம் கையெழுத்திடப்படுமானால் நாம் நீண்ட கால நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், இரு நாட்கள் பாராளுமன்றம் கூடவுள்ளது. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பான நீதிமன்றத்தின் ஆலோசனை நாளை (இன்று) சபாநாயகருக்கும் பாராளுமன்றத்திற்கும் அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டு மறுதினமே குறித்த சட்ட மூலம் மீதான விவாதத்தை நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். இந்த சட்ட மூலம் நாட்டின் இறையான்மை தொடர்பில் தீர்மானிக்கக் கூடியதாகும். இதிலுள்ள எழுத்துக்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டால் கூட அது நாட்டின் இறையான்மைக்கு அச்சுறுத்தலாக அமையும். சர்வதேசத்தின் மத்தியில் தேசிய பாதுகாப்பு அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சீனாவிற்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேயா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிரத்தியேகமான அமைப்பொன்றை உருவாக்கி செயற்படுகின்றன. இவ்வாறான நிலையில் சீனாவுடன் நீண்ட நெருங்கிய உறவைப் பேணுவதால், எமக்கு அயல் நாடான இந்தியா, இலங்கையின் ஏற்றுமதி அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்ற அமெரிக்கா, நீண்ட காலமாக இலங்கைக்கு உதவும் ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இலங்கை மீது நம்பிக்கையின்றியே செயற்படுகின்றன.

மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1977 இல் திறந்த பொருளாதார கொள்ளையை அறிமுகப்படுத்திய போது இலங்கை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து விடும் என்று இந்தியா அஞ்சியது. எனவேதான் இந்தியா 30 வருட கால யுத்தத்தை தோற்றுவித்தது. இலங்கையின் துரித பொருளாதார வளர்ச்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவை கோபத்திற்குள்ளாக்கியதால் எமக்கு கிடைத்த பிரதிபலன் அதுவாகும்.

தற்போதைய அரசாங்கமும் அதனையே செய்கிறது. இந்தியாவை கோபப்படுத்தும் வகையிலான வெளிநாட்டு கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. சீனாவுடன் தேவைக்கதிகமான தொடர்புகளைப் பேணுவதால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு துறைமுக நகரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டமாகும். ஆனால் இலங்கையின் இறையான்மைக்கு முரணாக துறைமுக நகர சட்ட மூலம் கையெழுத்திடப்படுமானால் நாம் நீண்ட கால பிரதிபலனுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

எனவே மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்ட மூலத்திற்கு ஒரு விவாதம் போதுமானதல்ல. இரண்டு அல்லது மூன்று தினங்கள் வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் ஒற்றையாட்சி, பூகோள தனித்துவம், இறையான்மை தொடர்பான பிரச்சினைகள் இதில் உள்ளன. அவ்வாறிருந்த போதிலும் கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் சீனாவை மகிழ்ச்சிப்படுத்திவே முயற்சிக்கின்றனர். தேசிய பாதுகாப்பு சர்வதேசத்தின் மத்தியில் பாரிய அச்சுறுத்தலுக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad