வட,கிழக்கை மீண்டும் இணைத்து முஸ்லிம்களை அடிமையாக்குவதற்கு சாணக்கியன் முயற்சிக்கின்றார் - கல்முனை மாநகர சபை உறுப்பினர் நிசார் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

வட,கிழக்கை மீண்டும் இணைத்து முஸ்லிம்களை அடிமையாக்குவதற்கு சாணக்கியன் முயற்சிக்கின்றார் - கல்முனை மாநகர சபை உறுப்பினர் நிசார்

(சர்ஜுன் லாபீர்)

அண்மைக் காலமாக தமிழ் முஸ்லிம் மக்களின் ஒன்றுமையினை வலியுறுத்தி பாராளுமன்றத்திலும் ஏனைய இடங்களிலும் மிக ஆக்ரோசமான கருத்துக்களை தெரிவித்து வந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் நீதி நியாயமான கருத்துக்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் துளிர்விட்டு வருகின்ற வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அறிக்கையானது தமிழ் முஸ்லிம் மக்களிடத்தில் பேரதிர்ச்சியையும், நம்பிக்கையின்மையினையும் ஏற்படுத்தி இருக்கின்றது .

அதாவது ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்று இன ரீதியான கருத்துக்களை மக்கள் மத்தியில் தூபமிட்டு விதைக்கின்றார் என்கின்ற மனோ நிலையை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். நிசார் தெரிவித்தார்.

கல்முனை உப பிரதேச செயலகம் சம்மந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியனின் அறிக்கையில் இரண்டு விடயங்களை குறிப்பிட்டு பேசி இருக்கின்றார். அதாவது நிபந்தனை அற்ற ரீதியில் மீண்டும் வடகிழக்கை இணைத்து கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற 40% ற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களை வடக்குடன் இணைத்து அடிமையாக்கி அவர்களுடைய உரிமைகளை நசுக்கி குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அரசியல் சித்தாந்த ரீதியாக அனுபவித்து வருகின்ற உரிமைகளையும், சலுகைகளையும் மீண்டும் வடக்குடன் தாரைவார்த்து அடிமை சாசணம் எழுதுவதற்கு சாணக்கியன் மறைமுகமாக ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்று செயற்படுகின்றார் என்பது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.

தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை கடந்த காலங்களில் வலியுறுத்தி செயற்பட்ட சாணக்கியன் வட கிழக்கை மீண்டும் இணைக்கும் படலத்தை ஆரம்பித்து மறைமுகமாக தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைகளை நிலை குலையச் செய்வதற்கு சாணக்கியன் முயற்சிகள் எடுப்பதனை அவருடைய அறிக்கை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

வடகிழக்கு இணைப்பானது முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் மீண்டும் தாரை வார்த்து அடிமைசாசனம் எழுதுவதற்கு ஒப்பானது என்பதை நாம் எல்லோரும் அறிந்த விடயம்.

தன்னுடைய அரசியல் இருப்புக்காகவும் சுய இலாபத்திற்க்காகவும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி கூறிவிட்டு அவர்களின் பின் முதுகில் குத்துகின்ற செயற்பாடாக சாணக்கியனின் அறிக்கை காணப்படுகின்றது.

அதேவேளை கல்முனை உப பிரதேச செயலகம் உப பிரதேச செயலகமாகவே கடந்த காலங்களில் இயங்கி வந்தது என்பது நாம் அறிந்த விடயமாகும். அதற்காக பெரிய உண்ணாவிரத போராட்டங்கள் எல்லாம் கடந்த காலங்களில் நடைபெற்று வந்தது நாம் அறிந்த தெரிந்த விடயம். 

ஆனால் கல்முனை பிரதேச செயலகத்தின் முறையான எல்லை நிர்ணயம் இல்லாமல் அதனை தரம் உயர்த்துவதற்கு ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் போன்று தானும் செயற்பட்டு அதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் பேசி இருக்கின்ற விடயமானது இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சாணக்கியன் சம்மந்தப்பட்ட ஒரு பீதியையும் ஒற்றுமையை நிலை குலைக்கின்ற ஒரு சக்தியாக மறைமுகமாக செயற்படுகின்றார் என்கின்ற அச்ச உணர்வினையும் ஏற்படுத்தி இருக்கின்றது. 

எனவே சாணக்கியன் வெருமனே நாவினால் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒன்றுமை பற்றி பேசுவதை விட்டுவிட்டு முஸ்லிம் மக்களின் அபிலாசைகளையும் அவர்களுடைய உரிமைகளையும் அறிந்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment