புர்கா, நிகாப் உள்ளடங்கலாக முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை அணிய தடை விதிக்கும் யோசனையை இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் - வலியுறுத்தியுள்ள சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Monday, May 3, 2021

புர்கா, நிகாப் உள்ளடங்கலாக முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை அணிய தடை விதிக்கும் யோசனையை இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் - வலியுறுத்தியுள்ள சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு

(நா.தனுஜா)

புர்கா மற்றும் நிகாப் உள்ளடங்கலாக முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடை விதிப்பதென்பது, ஒருவர் விரும்பிய மதம் அல்லது நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கு அனுமதியளிக்கின்ற சர்வதேச சட்டக்கடப்பாடுகளுக்கு முரணானதாகவே அமையும். பொதுமக்களின் உரிமையை மறுக்கும் வகையிலான இந்த மோசமான யோசனையை இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்று சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு புர்கா மற்றும் நிகாப் உள்ளடங்கலாக முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடை விதிக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சர்த வீரசேகரவினால் முன்வைக்கபட்ட யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தாம் விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையை மறுக்கும் வகையிலான இந்த மோசமான யோசனையை நிராகரிக்குமாறு இலங்கைப் பாராளுமன்றத்தை (உறுப்பினர்களை) வலியுறுத்துகின்றோம்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பொது இடங்களில் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையிலேயே, மறுபுறம் அரசாங்கம் இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் அவசரகால நிலைமையின் கீழ் முழுமையாக முகத்தை மூடும் வகையிலான ஆடைகளைத் தற்காலிகமாகத் தடை செய்தது. இந்தத் தீர்மானத்தின் விளைவாக முஸ்லிம் பெண்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையேற்பட்டது.

இலங்கை அரசாங்கம் அதன் குடிமக்களின் உயிர் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது. எனினும் அது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டின் ஓரங்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை அங்கத்துவம் வகிக்கின்ற சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் 18 ஆவது சரத்தின் கீழ் மதம் மற்றும் நம்பிக்கைகளுக்கான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமக்கு விரும்பிய மதத்தையோ அல்லது தமது நம்பிக்கைகளையோ பின்பற்றுகின்ற சுதந்திரம் இலங்கை அரசியலமைப்பின் கீழும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின்படி, மதம் அல்லது நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கான உரிமை என்பது அதற்குரிய சடங்குகளை மாத்திரம் உள்ளடக்கியதல்ல. மாறாக அதற்குரியவாறான ஆடைகள் அணிவதற்கான சுதந்திரத்தையும் அது உள்ளடக்கியுள்ளது.

இந்நிலையில் புர்காவை தடைசெய்வதென்பது, ஒருவர் விரும்பிய மதம் அல்லது நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கு அனுமதியளிக்கின்ற சர்வதேச சட்டக்கடப்பாடுகளுக்கு முரணானதாகவே அமையும். அதுமாத்திரமன்றி இந்தத் தீர்மானம் அடக்குமுறைகளுக்கு வழிவகுக்கும் அதேவேளை, முஸ்லிம் பெண்களைப் பாதிக்கும் வகையிலும் அமையும்.

No comments:

Post a Comment