நிறுவனங்கள், பொது போக்குவரத்து சேவைகளுக்கு கடும் சட்ட நடவடிக்கை - சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

நிறுவனங்கள், பொது போக்குவரத்து சேவைகளுக்கு கடும் சட்ட நடவடிக்கை - சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கை

செ.தேன்மொழி

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்படும் நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறியதற்காக இன்று சனிக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 4,455 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலுள்ள நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புக்களில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது 2,891 நிறைவனங்களைச் சேர்ந்த 6320 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய 2,023 நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை என்று தெரியவந்துள்ளது.

இதன்போது மேல் மாகாணத்தில் உணவு விநியோகத்தில் ஈடுபடும் வாகனங்கள், பேக்கரிகள், பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் ஆடை விற்பனை நிலையங்கள் தொடர்பிலும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வைரஸ் தொற்றை கட்டுபடுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்று நிருபத்தில் நிறுவனங்கள், ஹோட்டல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில் நிலையங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய சகல வேலைத்தளங்களும் செயல்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது போக்குவரத்திலும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். உரிமையாளர்கள், சாரதிகள், சாரதி உதவியாளர்கள் மற்றும் நடத்துனர்கள் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை கடைப்பிடிக்காத வாகனங்களை அடையாளம் காண்பதற்காக போக்குவரத்து பொலிஸ் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படும் அனைவரையும் அடையாளம் காண்பதற்காக கண்காணிப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பொலிஸார் சீருடை, சிவில் உடையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad