இலங்கை வரும் அனைவரும் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது அவசியம் : சுகாதார கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

இலங்கை வரும் அனைவரும் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது அவசியம் : சுகாதார கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்

நா.தனுஜா

கொரோனா வைரஸ் பரவலைப் பொறுத்த வரையில், எமது நாட்டுடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலியா குறைந்தளவான அச்சுறுத்தலையே எதிர்கொண்டுள்ளது. அவ்வாறிருந்தும்கூட இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் நுழைவதற்கு தமது சொந்த பிரஜைகளுக்குக்கூட அவுஸ்திரேலியா தடை விதித்திருக்கிறது.

எனவே தற்போதைய அச்சுறுத்தல் மிக்க சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரும் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்று சுகாதார கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ரவி ரன்னன் எலிய அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது இந்தியாவில் தற்போது பரவிவரும் மிகமோசமான திரிபடைந்த கொரோனா வைரஸ் தமது நாட்டில் பரவுவதைத் தடுப்பதற்காக, இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் நுழைவதற்கு தமது சொந்த பிரஜைகளுக்குக்கூட அவுஸ்திரேலியா தடை விதித்திருக்கிறது.

ஒருபுறம் தனிமைப்படுத்தல் செலவுகளைக் குறைப்பதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். எனினும் மறுபுறம் இந்த புதிய வைரஸ் பரவல் அச்சுறுத்தலை அவுஸ்திரேலியா எவ்வளவு தீவிரமாகக் கருத்திலெடுத்துள்ளது என்பதையும் அவதானிக்க வேண்டும்.

உண்மையில் எமது நாட்டுடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலியா குறைந்தளவான அச்சுறுத்தலையே எதிர்நோக்கியுள்ளது. எமது நாட்டிற்கு அதிக எண்ணிக்கையான இந்தியர்கள் வருகை தருகின்றார்கள் என்பதால் அல்ல.

ஏனெனில் அவுஸ்திரேலியாவிற்கு இதனைவிடவும் அதிக எண்ணிக்கையான இந்தியர்கள் விஜயம் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நடைமுறைப்படுத்தப்படும் பரிசோதனை முறைமையின் ஊடாக எமது நாட்டை விடவும் அங்கு தொற்றாளர்கள் விரைவாக இனங்காணப்படுகின்றார்கள்.

ஆகவே தற்போது நிலவும் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிலிருந்து வருகை தரும் அனைவரும் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். 

மேலும் கொழும்பு விமான நிலையத்தின் ஊடாக இந்தியர்கள் பயணிப்பதால், அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. ஆகையினால் விமான நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் வாரத்திற்கு ஒருமுறை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். 

அத்தோடு ஃபைஸர் அல்லது ஸ்புட்னிக் தடுப்பூசிகள் வழங்கலில் அந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad