இலங்கையில் ஒரே நாளில் 1800 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் : மக்களே அவதானத்துடன் செயற்படுங்கள் ! - News View

Breaking

Post Top Ad

Sunday, May 2, 2021

இலங்கையில் ஒரே நாளில் 1800 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் : மக்களே அவதானத்துடன் செயற்படுங்கள் !

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக நாளொன்றுக்கு 1500 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை குறைவாகவுள்ளதால் இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகவும், எனவே கடந்த இரு தினங்களாக இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று காலை வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற 113 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 11212 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னரைப் போன்று குறிப்பிட்டவொரு பிரதேசத்தில் மாத்திரம் கொத்தணிகளாக தொற்றாளர்கள் இனங்காணப்படாமல், வெவ்வேறு பகுதிகளிலும் பரவலாக தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் மக்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்று சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கின்றன.

இந்நிலையில் இன்று ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு, கொழும்பு, களுத்துறை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகள் முடக்கப்பட்டன.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இன்று ஞாயிறுக்கிழமை 1891 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 111753 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 97242 பேர் குணமடைந்துள்ளதோடு, 13161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றுவரை 928107 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதோடு, 88 088 பேருக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை பொலிஸ் பிரிவு, களுத்துறை - பாணந்துரை பொலிஸ் பிரிவில் வலான வடக்கு, வேகட வடக்கு, கிரிபேரிய, மாலமுல்ல கிழக்கு ஆகிய பிரதேசங்களும், திருகோணமலை - திருகோணமலை பொலிஸ் பிரிவில் ஓர்ஸ்ஹில் கிராம உத்தியோகத்தர் பிரிவு, உப்புவெலி பொலிஸ் பிரிவில் அன்புவெளிப்புறம் கிராம உத்தியோகத்தர பிரிவு, நுவரெலியா மாவட்டத்தில், வலப்பன பொலிஸ் பிரிவில் நில்தணடாஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன இன்று காலை 7 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டன.

புத்தாண்டின் பின் 14 000 தொற்றாளர்கள்
புத்தாண்டின் பின்னர் உருவாகியுள்ள கொத்தணியில் மாத்திரம் இன்று மாலை வரை 14634 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

இதுவரையில் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் 90637 தொற்றாளர்களும், ஏனைய கொத்தணிகளில் 5821 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சனியன்று 9 மரணங்கள்
நேற்று சனிக்கிழமை 9 கொவிட் மரணங்கள் பதிவாகின. கரதான பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும், அவிஸாவளை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவரும், ருவென்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவரும், தேவாலகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவரும், யக்கல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஆணொருவரும், வலப்பன பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆணொருவரும் இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad