சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை, இதனால் அரசாங்கம் அடிபணிந்துள்ளது : முறைகேடான செயற்பாடுகளின் கேந்திர மத்திய நிலையமாக துறைமுக நகரம் மாறும் - ரில்வின் சில்வா - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை, இதனால் அரசாங்கம் அடிபணிந்துள்ளது : முறைகேடான செயற்பாடுகளின் கேந்திர மத்திய நிலையமாக துறைமுக நகரம் மாறும் - ரில்வின் சில்வா

(இராஜதுரை ஹஷான்)

சீன கடன் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. இதனால் அரசாங்கம் சீனாவிற்கு அடிபணிந்து செயற்படுகிறது. அனைத்து முறைகேடான செயற்பாடுகளின் மத்திய கேந்திர மையமாக கொழும்பு துறைமுக நகரம் எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும். பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக நாட்டு மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணயின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியில் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் அரசாங்கம் குறிப்பிடும் அனைத்து விடயங்களும் வெறும் கானல் நீராகவே காணப்படும்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலயத்திற்கு ஒப்பாக வரலாற்றில் பல பொருளாதார வலயங்கள் உருவாக்கப்பட்டன. புதிதாக ஒரு நிலப்பரப்பை உருவாக்கி அதனூடாக அபிவிருத்தி நிர்மாண பணிகள் கொழும்பு துறைமுக நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. வெளிநாடு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் சட்ட சிக்கல் ஏதும் கிடையாது.

முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் போது அரச அதிகாரிகளுக்கு அவர்கள் அதிகளவில் இலஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதன் காரணமாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருவதில்லை. இவ்விடயம் குறித்து அரச தலைவர்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள விசேட வரப்பிரசாதங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாரதூரமானது.

சீன கடன் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. சீனாவின் கடன் நேசகரத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது. அவ்வாறு சிக்குண்டால் ஏற்படும் நிலைமை குறித்து சர்வதேச நாடுகள் தெளிவுபடுத்தும் போது இலங்கையினை பிரதான எடுத்துக்காட்டாக சர்வதேசம் சுட்டிக்காட்டுகிறது. அரசாங்கம் சீனாவிற்கு அடிபணிந்துள்ளது. ஜனாதிபதி சீனாவிற்கு ஏற்றாற்போல் செயற்படுகிறார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலயத்தில் தேசிய முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. தேசிய முதலீட்டாளர்கள் ரூபாவில் முதலீடு செய்ய முடியாத நிலை ஆணைக்குழு சட்டமூலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேசிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு இல்லாதொழிக்கப்படும். இலங்கைக்குள் ஒரு தனித்த பகுதியாகவே கொழும்பு துறைமுக நகரம் செயற்படும்.

ஒரு நாடு - ஒரு சட்டம் என்ற கொள்கையினை ஜனாதிபதி கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக பொய்யாக்கியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் கறுப்பு பண சுத்திகரிப்பாளர்களின் நிலையமாக மாற்றியமைக்கப்படும். நாட்டின் கலாச்சாரத்திற்கு பொறுத்தமற்ற பல நிலையங்கள் கொழும்பு துறைமுக நகரத்தில் ஸ்தாபிக்கப்படும்.

கொழும்பு துறைமுக நகரம் எதிர்காலத்தில் அனைத்து முறைகேடான செயற்பாடுகளின் கேந்திர மத்திய நிலையமாக மாற்றியமைக்கப்படும் அதற்கான அதிகாரம் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment