பேராயரையும், கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றும் அரசு, உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுங்கள் : துஷார இந்துனில் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

பேராயரையும், கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றும் அரசு, உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுங்கள் : துஷார இந்துனில்

(எம்.மனோசித்ரா)

பேராயரையும், கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றும் வகையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி எனக் குறிப்பிட்டு ஒருவரை கைது செய்துள்ளனர். இதன் மூலம் நாட்டு மக்கள் திருப்தியடையவில்லை. மாறாக அரசாங்கம் மாத்திரமே திருப்தியடைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியெனக் கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் அரசாங்கம் மாத்திரமே திருப்தியடைந்துள்ளது. இது தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார போன்றோரை கைது செய்ய முயற்சிக்கப்படுகிறது.

எவ்வித காரணமும் இன்றி ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். பேராயரையும் கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றுவதற்காக இவ்வாறு செயற்படாமல் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுத்துகின்றோம்.

இது இவ்வாறிருக்க, பொய்களைக்கூறி மக்களிடம் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட அரசாங்கம் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எதிர்பார்ப்புக்களுடன் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்த மக்கள் தோல்வியடைந்துள்ளனர் என்றார்.

முதலாம் அலையின் போது நாட்டை முடக்குமாறு நாம் வலியுறுத்திய போது அதனை கவனத்தில் கொள்ளாத அரசாங்கம் நிலைமை தீவிரமடைந்ததன் பின்னரே அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தது. இரண்டாம் அலை ஏற்பட்ட போதும் இதே நிலைமையே காணப்பட்டது. 

தமிழ் - சிங்கள் புத்தாண்டின் போது முறையான கட்டுப்பாடுகளை விதிக்காமையால் தற்போது மூன்றாம் அலைக்கும் முகங்கொடுத்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad