மைத்திரியை கைது செய்து சிறையிலடைப்பதென்பது அரசாங்கத்துக்கு பாரிய சிக்கல் - நெளபர் மெளலவியை காண்பித்து உண்மையான சூத்திரதாரியை மறைக்க முயற்சி : ஹர்ஷ டி சில்வா - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

மைத்திரியை கைது செய்து சிறையிலடைப்பதென்பது அரசாங்கத்துக்கு பாரிய சிக்கல் - நெளபர் மெளலவியை காண்பித்து உண்மையான சூத்திரதாரியை மறைக்க முயற்சி : ஹர்ஷ டி சில்வா

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஏப்ரல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மறைப்பதற்கே நெளபர் மெளலவியை அரசாங்கம் முன்னிலைப்படுத்தி இருக்கின்றது. அத்துடன், முஹமட் நெளபர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலோ அமெரிக்காவின் எப்.பி.ஐ. அறிக்கையிலோ அவருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு தெரிவிக்கப்படவில்லை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான ஐந்தாவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் புதிய விடயங்கள் என எதுவும் இல்லை. தாக்குதல் தொடர்பாக நாட்டில் அனைவருக்கும் அறிந்த விடயங்களே விசாரணை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன என்ற கருத்து அனைவராலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக தாக்குதல் இடம்பெற்று இன்னும் ஒரு வாரத்தில் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. அதனால் இந்த தாக்குதல் தொடர்பாக திருப்தியளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் சர்வதேசத்துக்கு முறையிடுவதாகவும் வீதிக்கிறங்குவதாகவும் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் உட்பட கத்தோலிக்க சபை அறிவித்திருக்கின்றது.

மேலும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் மிகவும் அழுத்தமாக அரசாங்கத்துக்கு தெரிவித்திருக்கின்றார். மல்கம் ரஞ்ஜித்தின் இந்த கோரிக்கை தொடர்பாக என்ன செய்வதென்று அரசாங்கம் சிந்தித்து வருகின்றது.

மைத்திரிபால சிறிசேனவை எப்படி கைது செய்வது, அவரை எப்படி சிறையிலடைப்பதென்பது அரசாங்கத்துக்கு பாரிய சிக்கலாகும். இவ்வாறான நிலையில் இந்த சம்பவத்தை எப்படி மறைப்பதென்று அரசாங்கம் சிந்தித்து வருகின்றது.

அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவளித்ததாக தெரிவித்து, ஏப்ரல் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க நீதித்துறை, இலங்கையர்கள் 3 பேருக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் வழக்கு தொடுத்திருந்தது. அவர்கள்தான் முஹமட் நெளபர், முஹமட் அன்வர் ரிஸ்கான், அஹமட் மில்ஹான் ஹயாத்து முஹம்மத் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் எப்.பி.ஐ. தனது அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. 

அந்த அறிக்கையில் நெளபர் என்பவர் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இரண்டாவது நபராக இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அவருக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுதான், அந்த அமைப்பின் பிரசாரத்துக்கு பொறுப்பாக இருந்தவர், ஆட்களை இணைத்துக் கொண்டவர், ஆயுத பயிற்சி வழங்கிவர் என்பதாகும்.

ஆனால், முஹமட் நெளபர் என்பவர் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என அந்த அறிக்கையில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் நெளபர் மெளலவி என்பவரை ஏப்ரல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக இனம் கண்டுள்ளதாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார்.

நெளபர் மெளலவி தொடர்பாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. அறிக்கையிலோ எமது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலோ அவ்வாறான அறிப்பு இல்லாத நிலையில், அரசாங்கம் திடீரென நெளபர் மெளலவி என்பவரை பிரதான சூத்திரதாரியாக பெயரிடுவது, இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மறைப்பதற்கான சதியா என்ற சந்தேகம் எழுகின்றது.

அதேபோன்று தாக்குதலின் அடுத்த சந்தேகநபரான சாரா புலஸ்தி உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என தனக்கு தெரியாது என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார். ஆனால், ஆணைக்குழுவுக்கு சாட்சியமளித்த சஹ்ரானின் மனைவி, சாய்ந்தமருதில் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் சாராவின் குரலை கேட்டதாக தெரிவித்திருக்கின்றார்.

சஹ்ரானின் அனைத்து விடயங்களுக்கும் சாரா சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஹாதியா தெரிவித்திருக்கின்றார். அப்படியாயின் ஏன் சாராவை தேடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்காமல் இருக்கின்றது.

எனவே, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த அதிகமானவர்களின் சாட்சியங்களை பார்க்கும்போது இந்த தாக்குதலுக்கும் அரசாங்கத்துக்கும் ஏதாவது ஒருவகையில் சம்பந்தம் இருக்க வேண்டும். அதேபோன்று நெளபர் மெளலவியை இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக காண்பித்து உண்மையான சூத்திரதாரியை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad