ரஞ்சனின் பதவியை வெற்றிடமாக்கிய பின்புலத்தில் அரசாங்கத்தின் சூழ்ச்சி, சபாநாயகரும் துணை - குற்றம் சுமத்தினார் சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

ரஞ்சனின் பதவியை வெற்றிடமாக்கிய பின்புலத்தில் அரசாங்கத்தின் சூழ்ச்சி, சபாநாயகரும் துணை - குற்றம் சுமத்தினார் சஜித் பிரேமதாச

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வெற்றிடமாக்கிய பின்புலத்தில் அரசாங்கத்தின் சூழ்ச்சியொன்று இடம்பெற்றுள்ளதுடன் அதற்கு சபாநாயகரும் துணை நின்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார். 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற பதவி வெற்றிடமாகியுள்ளமை தொடர்பில் சபாநாயகர் அளித்த விளக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு கருத்து வேறுபாட்டு தீர்ப்பை வழங்கியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் வாதாட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உரிமையுள்ளது. வழக்கு முடியும்வரை அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார் என்ற முடிவை எடுக்க வேண்டும். ஆனால், சபாநாயகர் அவசரப்பட்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். 

நீதிமன்றில் வழக்கு விவாத்தில் உள்ள தருணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் துரதிஷ்டவசமானது. இதற்கு பின்னால் அரசாங்கத்தின் சூழ்ச்சி உள்ளது. அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதை நீக்குவதே அந்த சூழ்ச்சியாகும்.

கம்பஹா மாவட்ட மக்களின் அங்கீகாரத்துடன்தான் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திற்கு தெரிவானார். அவரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பரிப்பதானது மக்களின் அங்கீகாரத்திற்கு எதிரான செயற்பாடாகும்.

ஒருவேளை, உயர் நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் இருக்க வேண்டுமென தீர்மானம் எடுத்தால் சபாநாயகர் என்ன செய்வார்? தற்போது உயர் நீதிமன்றில் வழக்காட அவர் தயாராகிக் கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை எழுதி இது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும். 

எமது நாட்டில் ஒருவருக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட வேண்டிய உரிமை மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவருக்கு உள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் பிரகாரம் அவரை பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கக் கூடாது. 

உயர் நீதிமன்றம் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தால் நாங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறோம். சபாநாயகரின் அறிவிப்பு தவறானது என்பதுடன், அரசியல் அமைப்புக்கும் எதிரான தீர்மானமாகும். 

பிரேமலால் ஜயசேகரவுக்கு மேன்முறையீடு செய்வதற்கான உரிமை இருந்தது. ஆனால், ரஞ்சனுக்கு அந்த உரிமை வழங்கப்படவில்லை. சபாநாயகர் இவ்வாறு செயற்படுவதன் மூலம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பங்காளராக செயற்பட்டுள்ளார் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment