யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை குறித்து விசாரணை! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 7, 2021

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை குறித்து விசாரணை!

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக அவரிடம் நேற்று (புதன்கிழமை) மாலை சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக பொலிஸார் வாக்குமூலத்தினை பதிவு செய்திருந்தனர்.

காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல்படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பாக கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.
இதனால் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருந்தார்.

விசாரணைகள் தொடர்பில் பொலிஸாரின் தகவலைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று மாலை ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார்.

இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment