சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்கக் கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்கக் கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்கக் கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் தொடர்புபட்ட நிறுவனங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விளையாட்டு அபிவிருத்தி என்ற விடயத்தில் இன்று கிராம மற்றும் பாடசாலை மட்ட விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு வகையான திட்டங்கள் முன்மொழியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு அபிவிருத்தி ஏற்படும். 

விளையாட்டு துறையோடு தொடர்புபட்ட திறமையான வீரர்களை இனங்கண்டு அவர்களுக்கு வசதி வாய்ப்புக்களை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன் மூலமாக அவர்களுடைய திறமைகளை வெளிக்கொணரும் சந்தர்ப்பம் ஏற்படும். 

இளைஞர்கள் நாட்டினுடைய முதுகெலும்பாக காணப்படுகின்றார்கள். நாட்டினுடைய பொருளாதாரத்துக்கு வலுசேர்க்க கூடியவர்களாக இளைஞர்களை மாற்றியமைப்பது முக்கியமானதாக காணப்படுகின்றது.

பல்வேறு வகையான புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக அவர்கள் எதிர்வருகின்ற காலங்களில் பொருத்தமான தொழில்களை பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் படையணி, தொழிற்பயிற்சி அதிகார சபை ஆகிய நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு தேவையான பாடநெறிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக இளைஞர்களுடைய வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை முடிவதுடன் நிபுணத்துவ அறிவையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல, பிரதேச அரசியல் தலைமைகள், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராதா விஜயகோன், மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad