மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு நியாயம் வழங்குமாறு 6 தொழிற்சங்கங்கள் கூட்டாக கோரிக்கை - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு நியாயம் வழங்குமாறு 6 தொழிற்சங்கங்கள் கூட்டாக கோரிக்கை

(எம்.எம்.சில்வெஸ்டர்)

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் நிறுவன ஊழியர்களின் தொழில் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அங்கு தொழில்புரிந்த பலர் தமது தொழில்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான தொழிற்துறையை வழங்கக் கோரியும், அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு நியாயம் வழங்கக் கோரியும் ஆறு தொழிற்சங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னிலையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களது தொழில் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்.

மேலும், முதலாளிமார்களுக்கு சாதகமாக செயற்படாது, ஆடை தொழிற்சாலையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு தொழிலாளர்கள் மீதும் கரிசனையுடன் செயற்பட்டு அவர்களுக்கு நியாயத்தை வழங்குமாறு ஆறு சங்கங்களும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இது தொடர்பான ஊடகச் சந்திப்பொன்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர் சங்கத்தில் நடைபெற்றது.

இந்த ஊடகச் சந்திப்பை வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கம், வியர்வைத் துளிகளின் கூட்டமைப்பு, இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர் சங்கம், மனித மேம்பாட்டுக்கான புரட்சிகர அமைப்பு, எழுந்து நில் தொழிலார் சங்கம், கடற்பயணிகளின் தேசிய ஒன்றியம் ஆகிய ஆறு தொழிற்சங்கங்கள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது கருத்து தெரிவித்த வியர்வைத் துளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டளர் ஷமிலா துஷாரி தெரிவிக்கையில், ஆறு மாதங்களுக்கு முன்னர், அதாவது 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதியன்று மினுவாங்கொடையிலுள்ள பிரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய 1400 பணியார்களில் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது மார்ச் மாதத்தில் ஏற்பட்ட முதலாவது கொவிட் பரவலாக அடையாளப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக, மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் நிறுவன கொவிட் 19 கொத்தணியில் ஏதேனும் தொழில் உரிமை மீறல்கள் நடந்திருக்குமாயின், அதனை விசாரிக்குமாறு 2 பேரைக் கொண்ட குழுவொன்றை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தார்.

இதன்படி, பிரெண்டிக்ஸ் நிறுவனமானது குற்றவியல் செயற்பாடுகள் மற்றும் புறக்கணிப்புகளை மேற்கொண்டுள்ளதா? என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சட்ட மா அதிபர் 2020 ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்பரை விடுத்தார்.

இது தொடர்பான குழு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி அமைக்கப்பட்டிருந்த போதிலும், விசாரணை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் தெரியவில்லை.

ஆகவே, உடனடியாக இந்த விசாரணை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுங்கள். தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad