இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க பென்ஜமின் நெதன்யாகுவுக்கு 28 நாள் காலக்கெடு - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க பென்ஜமின் நெதன்யாகுவுக்கு 28 நாள் காலக்கெடு

இஸ்ரேலின் அண்மைய தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் புதிய அரசு ஒன்றை அமைக்கும் வாய்ப்பை பென்ஜமின் நெதன்யாகுவிடம் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இஸ்ரேலின் இடைக்கால பிரதமராகவும் நீண்ட கால தலைவராகவும் இருக்கும் நெதன்யாகு, கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் அதிக எம்.பிக்களின் ஆதரவை பெற்றவராக உள்ளார்.

எனினும் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகு அல்லது எந்த ஒரு எதிர்க்கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஒரு நிலையான அரசை அமைக்க முடியாத சூழலில் கடந்த மாதம் 4வது முறையாக பொதுத் தேர்தல் நடந்தது.

இதில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 59 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்கின்ற நிலையில் அந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதேபோல் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எதிராக போட்டியிட்ட எதிர்க்கட்சி கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு பென்ஜமின் நெதன்யாகுவுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி ருவன் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் புதிய அரசை அமைப்பதற்கு பென்ஜமின் நெதன்யாகுவுக்கு 28 நாள் காலக்கெடு விதித்துள்ளார்.

இந்த காலக்கெடுவுக்குள் பென்ஜமின் நெதன்யாகு ஆட்சியமைக்க தவறும்பட்சத்தில், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உள்ளது என உரிமை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஆட்சி அமைக்க ஜனாதிபதி ருவன் ரிவ்லின் அழைப்பார்.

அப்படி யாரும் உரிமை கோரவில்லை என்றால் மீண்டும் பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி ருவன் ரிவ்லின் உத்தரவிடுவார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad