தரை சுத்தப்படுத்தும் உபகரணத்தினுள் 22 கோடி ரூபா பெறுமதியான 161 தங்க கட்டிகள் - தூய்மைப்படுத்தல் ஊழியர் கைது - இலங்கை விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட அதிகூடிய தங்கக் கடத்தல் முறியடிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, April 3, 2021

தரை சுத்தப்படுத்தும் உபகரணத்தினுள் 22 கோடி ரூபா பெறுமதியான 161 தங்க கட்டிகள் - தூய்மைப்படுத்தல் ஊழியர் கைது - இலங்கை விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட அதிகூடிய தங்கக் கடத்தல் முறியடிப்பு

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, விமான நிலையத்திலிருந்து கடத்த முயற்சி செய்யப்பட்ட ரூ. 22 கோடிக்கும் (ரூ. 220 மில்லியன்) அதிக பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தூய்மைப்படுத்தல் பணியில் ஈடுபடும் நிறுவனத்தில் பணிபுரியும் 37 வயதான நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என, சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (03) முற்பகல், குறித்த சந்தேகநபர் தரையை சுத்தப்படுத்தும் ஒரு வெற்று இயந்திரமொன்றினுள் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்து, விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார். 

இதன்போது, குறித்த இயந்திரத்தை சோதனையிட்ட, போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 17 கிலோ கிராம் எடை கொண்ட 161 தங்க பிஸ்கட்டுகளை மீட்டுள்ளனர்.

இன்று (03) காலை துபாயிலிருந்து வந்த பயணிகள் விமானத்தில் வந்த ஒருவரால் இத்தங்க பிஸ்கட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின், விமான நிலைய சோதனை வரலாற்றில் இதுவரை முறியடிக்கப்பட்ட அதிகூடிய தங்கக் கடத்தல் இதுவாகும் என, சுங்கத் திணைக்கள போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் பிரதி சுங்க அத்தியட்சகர், நுவன் அபேநாயக்க தெரிவித்தார்.

சந்தேகநபர் குறித்த தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு சென்று மற்றுமொரு தரப்பினரிடம் கையளிக்கும் திட்டமே இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

No comments:

Post a Comment