ஹக்கீம் மாத்திரம்தான் புதிதாய் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு ஆண்கள் வாட்டுக்குச் சென்றவராவார் - ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னைய ஆட்சியிலிருந்த அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் : மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

ஹக்கீம் மாத்திரம்தான் புதிதாய் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு ஆண்கள் வாட்டுக்குச் சென்றவராவார் - ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னைய ஆட்சியிலிருந்த அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் : மஹிந்தானந்த

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் குழுவினர், கடந்த ஆட்சியில் இருந்ததவர்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கும் உதவி செய்தனர் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விவாதத்தில் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் கூறியுள்ளதாவது, “சம்பவமொன்றில் காயமடைந்த சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவரை பார்ப்பதற்கு​ வைத்தியசாலைக்கு ஹக்கீம் சென்றிருந்தார்.

அந்த விவகாரம் தொடர்பில் தகவல்கள் கிடைத்தவுடன், அவரிடம் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தினர். இதன்போது பிறந்த குழந்தையொன்றை பார்ப்பதாகவே சென்றதாக அவர் பதிலளித்துள்ளார். 

இவ்வாறு, ஹக்கீம் மாத்திரம்தான் புதிதாய் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு ஆண்கள் வாட்டுக்குச் சென்ற ஒருவராவார்.

மேலும் சஹ்ரானுடன் இணைந்து செயற்பட்டவர்களுடன் தேர்தலின்போது வாக்குகள் கேட்பது மாத்திரம் கடந்த ஆட்சியாளர்களை பொறுத்தவரை சரியான விடயமாக இருக்கின்றது.

இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஒருவரை ஒருவர் கை நீட்டுவதினால் எந்ததொரு பயனுமில்லை. இந்த தாக்குதல் இடம்பெற்றமைக்காக காரணம் தொடர்பாக முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய தாக்குதல் இடம்பெற்றமைக்கு முக்கிய காரணம், கடந்த அரசாங்கத்தில் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து இருக்காமையே ஆகும். இதனை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

கிரியெல்ல, சம்பிக்க, சஜித், ரஞ்சித் பண்டார, கயந்த, பொன்சேக்கா உள்ளிட்ட அனைவரும் நாடாளுமன்றத்தில் தற்போது அங்கம் வகித்துள்ளார்கள். நீங்கள் அனைவரும் கடந்த ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரத்துக்கு முன்னுரிமை வழங்கவில்லை. மாறாக தங்களது அமைப்புக்கே முன்னுரிமை வழங்கினீர்கள்.

பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட பதவிகளை பெறுவது எவ்வாறு என்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தினீர்கள். நாட்டின் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ளவில்லை.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோர் நாட்டின் பாதுகாப்புக்கே அதிக முன்னுரிமை வழங்கி வருகின்றனர். அதாவது, நாட்டின் பாதுகாப்பு பலமிக்கதாக காணப்பட்டால்தான் சிறந்த முறையில் முன்னோக்கி நாட்டை கொண்டு செல்ல முடியும்.

கடந்த ஆட்சியில், மங்கள சமரவீர, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இராணுவத்தினருக்கு எதிரான பிரேரணைக்கு இணை அனுசரனை இலங்கை வழங்குவதாக ஆதரவு வழங்கி இருந்தார்

இவ்வாறு கடந்த ஆட்சியின் செயற்பாடுகள் பல, நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தது.

எனவே ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் ஒரு சிலரை மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது. அப்போது ஆட்சியில் இருந்த அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment