இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியெனில் பணிப்பகிஷ்கரிப்பு : எச்சரிக்கை விடுத்துள்ள புகையிரத தொழிற்சங்கங்கள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 17, 2021

இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியெனில் பணிப்பகிஷ்கரிப்பு : எச்சரிக்கை விடுத்துள்ள புகையிரத தொழிற்சங்கங்கள்

(இராஜதுரை ஹஷான்)

முன்னறிவித்தல் ஏதுமின்றிய நிலையில் புகையிரத சாரதிகள் சங்கத்தினரும், புகையிரத கட்டுப்பாட்டு பிரிவினரும் நேற்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டார்கள். இப்பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று போக்குவரத்து அமைச்சருடன் புகையிரத தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையினை முன்னெடுப்பார்கள் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் குணசிங்க தெரிவித்தார்.

புகையிரத தொழிற்சங்கத்தினரை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தற்போது ஒரு சில நடவடிக்கைகள் புகையிரத சேவையில் முன்னெடுக்கப்படுகின்றன. தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தினை தொடருவோம் என புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

புகையிரத சாரதிகள் சங்கத்தினர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

புகையிரத சாரதிகள் சங்கத்தினரும், புகையிரத கட்டுப்பாட்டாளர் சங்கத்தினரும் நேற்று காலை 10 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டார்கள். பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படுவதாக எவ்விதமான முன்னறிவித்தலும் புகையிரத திணைக்களத்துக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. 

பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டதன் பின்னரே தொலைநகல் (பெக்ஸ்) ஊடாக அறிவித்தார்கள். இது முற்றிலும் தவறாக செயற்பாடு இதற்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்படும். பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டன் பின்னரே பணிப்புறக்கணிப்பிற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்கள்.

இவ்விடயம் குறித்து புகையிரத திணைக்களத்தில் புகையிரத சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. காரணமற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு, புகையிரத விபத்தின் போது புகையிரத சாரதிகள் ஏற்க வேண்டிய பொறுப்பு மற்றும் நட்டத் தொகை ஆகியவற்றை மீள்பரிசீலனை செய்து மறுசீரமைத்தல், பதவி உயர்வில் காணப்படும் சிக்கல் நிலை, இந்தியாவில் இருந்து புகையிரத பெட்டிகள் இறக்குமதி செய்வதை தடுத்தல் ஆகிய விடயங்கள் இவர்களின் பணிப்புறக்கணிப்புக்கான பிரதான கோரிக்கையாக காணப்பட்டன.

இக்கோரிக்கைகளுக்கு ஓரிரு நாட்களில் ஒருபோதும் தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது என தெளிவுப்படுத்தப்பட்டது.

புகையிரத சாரதிகள் நேற்று காலை 10 மணிக்கு பிறகு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டதால் கொழும்பில் இருந்து புறப்பட தயாராகயிருந்த புகையிரதங்களின் பயணத்தில் தாமதம் ஏற்பட்டன. பேச்சுவார்த்தையினை தொடர்ந்து நேற்று மாலை 3.30 மணியளவில் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டு புகையிரத சேவை வழமை நிலைக்கு திரும்பின.

புகையிரத தொழிற்சங்கத்தினரது கோரிக்கை தொடர்பில் இன்று காலை போக்குவரத்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. பணிப்புறக்கணிப்பை தொடர்வதா, இல்லையா என்பது பேச்சுவார்த்தையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என புகையிரத தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad