உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையில் இரு வகையான பரிந்துரைகள் முன்வைப்பு - சட்டமா அதிபரால் மாத்திரமே குற்றவியல் வழக்கு தொடர்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் : உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையில் இரு வகையான பரிந்துரைகள் முன்வைப்பு - சட்டமா அதிபரால் மாத்திரமே குற்றவியல் வழக்கு தொடர்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் : உதய கம்மன்பில

(எம்.மனோசித்ரா) 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சட்ட ரீதியானதும், அரசியல் - சமூக ரீதியானதுமான இரு வகை பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குற்றவியல் வழக்கு தொடர்வது தொடர்பில் சட்டமா அதிபரால் மாத்திரமே தீர்மானம் எடுக்கப்படும். இவ்விடயங்களில் வேறு தரப்பினரின் தலையீடுகள் காணப்படாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய பரிந்துரைகளில் நடைமுறை சாத்தியமான முறையில் அமுல்படுத்தப்படக் கூடியவை தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் அறிக்கை வெகுவிரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்றும் இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைகள் மாத்திரமே உள்ளடங்குகின்றன. இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதி ஆணைக்குழுவினாலும் வழங்கப்பட்ட சகல பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

குறித்த அறிக்கையில் சட்ட ரீதியான பரிந்துரைகள் மற்றும் அரசியல் - சமூக பரிந்துரைகள் என இரு வகை பரிந்துரைகள் உள்ளன. சட்ட ரீதியான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பின் அவை சட்டமா அதிபரின் பொறுப்பின் கீழ் உள்ளடக்கப்படும். எனவே சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பதை சட்டமா அதிபர் மாத்திரமே தீர்மானிப்பார். இதில் வேறு யாருடைய தலையீடும் ஏற்படாதவாறு நாம் அவதானத்துடனிருப்போம்.

இலங்கையில் எந்தவொரு பிரஜைக்கு எதிராகவும் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதா?, இல்லையா என்பது தொடர்பிலும் சட்டமா அதிபரால் மாத்திரமே தீர்மானிக்க முடியும். எனினும் வெவ்வேறு நிறுவனங்களை அமைத்தல், தற்போது காணப்படும் சட்டங்களை மறுசீரமைத்தல், கொள்கை ரீதியான விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறை சாத்தியமான முறையில் அமுல்படுத்த முடியுமா, அமுல்படுத்த முடியுமெனில் எவ்வாறு அமுல்படுத்துவது என்பதற்கான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காகவே அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் அறுவடங்கிய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவின் அறிக்கை வெகு விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். இந்த குழுவில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது. ஏனைய விடயங்கள் பற்றியே அவதானம் செலுத்தப்படும் என்றார்.

இது தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றதும், அதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டதும் கடந்த அரசாங்கத்திலாகும். இவ் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கத்தின் தலையீடுகள் எவையும் இல்லை. 

சுயாதீனமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திற்குள் பாராளுமன்றத்திலும், சட்டமா அதிபரிடமும் ஏனைய மதத் தலைவர்களிடமும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு நாம் துரிதமான செயற்பாடுகளை முன்னெடுப்போம். இதில் மறைப்பதற்கு எவ்வித காரணிகளும் எமது அரசாங்கத்திடமில்லை என்றார்.

No comments:

Post a Comment