மூன்று ஆளுமைகளை மதித்து மருதமுனை வீதிகளுக்கு பெயர்சூட்டுவது பாராட்டத்தக்கதாகும் : கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 30, 2021

மூன்று ஆளுமைகளை மதித்து மருதமுனை வீதிகளுக்கு பெயர்சூட்டுவது பாராட்டத்தக்கதாகும் : கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான்

மாளிகைக்காடு நிருபர்

கல்முனை மாநகர மேயரினால் மருதமுனையில் காணப்படுகின்ற வீதிகளுக்கு பெயரிடுவது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை பாராட்டத்தக்கதாகும். பளீல் மௌலானா மற்றும் ஹசன் மௌலவி, லீடர் அஷ்ரப் ஆகிய எல்லோரும் மருதமுனை மக்களின் மனங்களில் என்றென்றும் நின்று வாழ்ந்தவர்கள். இதில் பளீல் மௌலானா அவர்கள் கல்முனை மாநகர சபை முன்னாள் மேயர் செனட்டர் மசூர் மௌலானா அவர்களின் குடும்ப உறவு முறையானவர். மருதமுனை வரலாற்றில் மாத்திரமன்றி முழு நாட்டுக்குமே கல்வி பங்களிப்பு செய்து ஓய்ந்த பெருந்தகை. மார்க்கக் கல்வி, ஆங்கிலப் புலமை, மற்றும் சமூகசேவை பண்பாட்டு விடயங்களிலும், இன நல்லுறவை கட்டியெழுப்புவதிலும், அவருடைய தனிமனித ஆளுமையை வெளிப்படுத்தியதோடு தனிமனித ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய ஒருவராவார் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் தெரிவித்தார்.

நேற்று மாலை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமையில் நடைபெற்ற கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் கற்று ஆசிரியராக தனது கல்விப் பணியை தொடர்ந்த பளீல் மௌலானா அவர்கள் உதவி ஆசிரியராக மற்றும் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலைகள் தலைமையாசிரியராக, கல்வி அதிகாரியாக பரிணமித்து ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் ஆக இருந்து ஓய்வு பெற்று இருக்கின்றார். வட்டாரக் கல்வி அதிகாரியாக முழுநாட்டுக்குமே சேவை செய்தும் இருக்கின்றார். அதேபோன்றே ஹஸன் மௌலவி அவர்களும் மருதமுனை வரலாற்றில் பல்வேறு சேவைகளை செய்து மார்க்கப் பணியாற்றி ஓய்ந்த பெருந்தகை.

தீர்மானம் மேற்கொள்ளும் திறன், பேச்சாற்றல், வியாக்கியானம், விவேகம், நகைச்சுவைத் தன்மை போன்ற பல்வேறுபட்ட ஆளுமை திறன்களை தன்னகத்தே கொண்ட ஓர் மாமனிதனாக திகழ்ந்தார். பொது மக்களின் தேவையறிந்து நாடி பிடித்து மார்க்கச் சொற்பொழிவு, குத்பா பிரசங்கம் நிகழ்த்துவதில் ஹஸன் மௌலவி கில்லாடி . ஊரிலே விவாகரத்துப் பிரச்சினைகளை கச்சிதமாக தீர்த்து வைத்து கணவன் மனைவி விரிசலினை போக்கிய மாமனிதர் அவர். ஹசன் மௌலவியை போன்ற ஓர் ஆளுமையின் வெற்றிடம் இன்னும் மருதமுனை மண்ணில் உணரப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் கடத்திச் சென்ற மருதமுனை மண்ணின் மைந்தர்களை மீட்க துணைநின்ற வரலாறு அவருக்குரியது. மாத்திரமன்றி பொது நலனுக்காக ஊர் நலனுக்காக பல வழக்குகளை சந்தித்த மனிதராகவும் அவர் காணப்படுகின்றார். இவ்வாறான இவர்கள் இருவரினதும் பெயர்களை மதித்து கொண்டு வந்த பிரேரணைக்கு மேலதிகமாக முஸ்லிங்களின் தேசிய தலைவராக போற்றப்படும் தலைவர் லீடர் அஷ்ரப் வீதியையும் இணைத்து அந்த மூன்று வீதிகளுக்கும் பெயர் சூட்டுவதில் எவ்விதமான ஆட்சேபனையும் யாருக்கும் இருக்கப் போவதில்லை என நான் கருதுகிறேன் என்றார்.

No comments:

Post a Comment