டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சடலம் கெசல்வத்த தினுகவினுடையதா ? - பொறுப்பேற்க வந்த தாயாரிடம் ஒப்படைக்கப்படாத சடலம், விஷேட விசாரணைகள் ஆரம்பம் ! - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சடலம் கெசல்வத்த தினுகவினுடையதா ? - பொறுப்பேற்க வந்த தாயாரிடம் ஒப்படைக்கப்படாத சடலம், விஷேட விசாரணைகள் ஆரம்பம் !

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பிச் சென்று டுபாயில் வசித்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும் பாதாள உலக தலைவனான கெசல்வத்தே தினுக எனும் ஆர்.ஏ. தினுக மதுஷானினுடையது எனக் கூறப்படும் சடலமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இன்று முற்பகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11.25 மணியளவில் யூ.எல். 232 எனும் டுபாயிலிருந்து வந்த விமானத்தில் இந்த சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் குறித்த சடலம், ஆர். கசுன் மதுரங்க எனும் 35 வயதுடைய நபரினுடையது என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சடலத்தை பொறுப்பேற்க வந்த ஆர்.ஏ. தினுக மதுஷான் எனும் கெசல்வத்தே தினுகவின் தாயாருக்கு சடலத்தை ஒப்படைக்கவில்லை எனவும், அது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

இந்நிலையில், டுபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட சடலமானது உண்மையிலேயே கெசல்வத்தே தினுகவினுடையதா என உறுதிப்படுத்த, சடலம் மீது டி.என்.ஏ. பரிசோதனை முன்னெடுக்கவும், வாழைத்தோட்டம் பொலிஸ் பதிவில் உள்ள கெசல்வத்தே தினுகவின் கைவிரல் ரேகையுடன் சடலத்தின் கைவிரல் ரேகையை ஒப்பீடு செய்து உறுதிப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

இது குறித்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நீதிமன்றின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதுவரை சடலத்தை நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டுக்கும் 2012 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மத்திய கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் கெசல்வத்தே தினுக அவசியமான சந்தேக நபராக பொலிஸாரால் இணங்காணப்பட்டிருந்தார்.

குறிப்பாக 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்துடன் தினுகவின் பாரிய குற்றச் செயல்கள் பொலிஸ் பதிவேட்டில் பதிவாகும் நிலையில் 2010 ஆம் ஆண்டு ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை குறித்த குற்றச்சாட்டும் தினுக மீது உள்ளது.

இவ்வாறான நிலையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெசல்வத்தே தினுக 2012 ஆம் ஆண்டின் பின்னர் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் உளவுத் துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் அவர் டுபாய்க்கு தப்பிச் சென்று அங்கு வாழ்கின்றமை தெரியவந்தது.

எனினும் டுபாயிடம் இது குறித்து பொலிசார் தகவல் கோரிய நிலையில், அவ்வாறான ஒரு நபர் அங்கு இல்லை எனும் பதிலே கிடைத்துள்ளதுடன், டுபாயில் ஆர். கசுன் மதுரங்க எனும் 35 வயதான ஒருவரே உள்ளமை தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் தனது பெயரை மாற்றி கெசல்வத்தே தினுக டுபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த 2012 ஜூலை 19 ஆம் திகதி ஸ்ரீ லங்கன் விமான சேவை ஊடாக அவர் இவ்வாறு வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையை மையப்படுத்தி கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் கோரிக்கைக்கு அமைய சர்வதேச பொலிஸார் கெசல்வத்தே தினுகவுக்கு கடந்த 2018 ஜூலை 18 ஆம் திகதி சிவப்பு அரிவித்தல் பிறப்பித்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே கெசல்வத்தை தினுக டுபாயில் மரணித்ததாக செய்திகள் கடந்த வாரம் வெளியான நிலையில், தற்போது அவரது சடலம் எனக் கூறி கொண்டுவரப்பட்டுள்ள சடலம் மீது டி.என்.ஏ. கைவிரல் ரேகை பரிசோதனைகளை முன்னெடுத்து ஆள் அடையாளத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாட்டில் உள்ள கொவிட் சூழலுக்கு அமைய, சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் பிரகாரம், வெளிநாட்டிலிருந்து அனுப்படும் எந்தவொரு சடலமும், விமான நிலையத்தை அண்மித்த இடமொன்றிலேயே இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.

அதன்படி, ஆள் அடையாளம் அறிவியல் சான்றுகள் ஊடாக உறுதியான பின்னர், பெரும்பாலும் நீர்கொழும்பை அண்மித்த பகுதியிலேயே தினுகவின் சடலம் தொடர்பில் இறுதிக் கிரியைகள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad