சவாலை சட்ட ரீதியாகவோ, தொழிற்சங்க ரீதியாகவோ எதிர்கொள்ளத் தயார் - செந்தில் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

சவாலை சட்ட ரீதியாகவோ, தொழிற்சங்க ரீதியாகவோ எதிர்கொள்ளத் தயார் - செந்தில் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாட் சம்பளத்தை வழங்க முடியாதென்று நீதிமன்றத்தை நாடியுள்ள பெருந்தோட்டக் கம்பனிகளை, சட்ட ரீதியாகவோ தொழிற்சங்க ரீதியாகவோ எதிர்கொள்ள, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கிறதென்று, காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில், ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாட் சம்பளமாக 1,150 ரூபாயை வழங்குவதற்கான பொறிமுறையை முன்வைத்திருக்கிறோம் என்று தெரிவித்திருந்த பெருந்தோட்டக் கம்பனிகள், அத்தொகையைத் தொழிற்சங்கங்கள்தான் ஏற்க மறுக்கின்றன என்ற குற்றச்சாட்டை, தொடர்ந்து ஆறு மாத காலமாகவே முன்வைத்து வந்தன. 

எவ்வாறாயினும், 900 ரூபாய் அடிப்படைச் சம்பளத்துடன் 100 ரூபாய் வரவு செலவுத் திட்டக் கொடுப்பனவுடன் ஆயிரம் ரூபாய் மாத்திரமே தற்போது வர்த்தமானியாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கம்பனிகள் முன்வைத்திருந்த பொறிமுறையையும் விடக் குறைந்த சம்பளமே இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கையில், தற்போது வர்த்தமானியாக்கப்பட்டுள்ள தொகையை, மிகுந்த மகிழ்ச்சியுடன் கம்பனிகள் வழங்க முன்வந்திருக்கலாம். மாறாக அவர்கள் அத்தொகையை வழங்க முடியாதென்று நீதிமன்றத்தை நாடியுள்ளமையானது, கம்பனிகளின் தரக்குறைவான செயற்பாட்டையே எடுத்தியம்புகிறது.

அதுமட்டுமின்றி, 1,150 ரூபாய் நாட் சம்பளத்தை வழங்குவோம் என்று கம்பனிகள் தெரிவித்திருந்தமை பெரும் நாடகம் என்பதும், தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

எவ்வாறெனினும், 3 மில்லியன் ரூபாயை மாதச் சம்பளமாகப் பெறும் பெருந்தோட்டக் கம்பனியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு, தொழிலாளியின் ஆயிரம் ரூபாய்க்கான வேதனை புரிய வாய்ப்பில்லை. 

இவ்வாறான மனித நேயமற்றவர்களிடம் எமது தொழிலாளர்கள் பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை எண்ணி வேதனையடைகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினையை சட்ட ரீதியாக அல்லது தொழிற்சங்க ரீதியாக எதிர்கொள்ளவோ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் தயாராகவே இருக்கின்றது என்றும், செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment