சீனி மோசடி, காடழிப்பு உள்ளிட்ட விடயங்களை மறைக்க அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்டிருக்கும் நாடகமே ரவி கருணாநாயக்கவின் கைது - சமிந்த விஜேசிறி - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

சீனி மோசடி, காடழிப்பு உள்ளிட்ட விடயங்களை மறைக்க அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்டிருக்கும் நாடகமே ரவி கருணாநாயக்கவின் கைது - சமிந்த விஜேசிறி

(எம்.மனோசித்ரா)

சீனிக்கான இறக்குமதி வரி குறைப்பின் மூலம் இடம்பெற்றுள்ள பாரிய மோசடியை மறைப்பதற்காக அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்டிருக்கும் நாடகமே முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கைதாகும். அத்தோடு மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாக்க சீனி மோசடியை மறைப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இவ்விடயம் பேசுபொருளாகியுள்ளதால் நாட்டு மக்கள் சீனி மோசடியை மறந்துவிடுவார்கள். சீனி மோசடி மாத்திரமின்றி காடழிப்பு உள்ளிட்ட விடயங்களை மறைப்பதற்காகவும் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்திலும் மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கார்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களான நாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்தோம். எனினும் தற்போது மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் கைது செய்யப்படாமல் ரவி கருணாநாயக்க போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளமை வெறும் நாடகம் மாத்திரமேயாகும்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடைய சகாக்கள் இதனுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் என்று தற்போதைய அரசாங்கம் எதிர்கட்சியிலிருந்து போது கூச்சலிட்டது. அவ்வாறெனில் ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லை? ஆனால் தற்போது சீனி மோசடியை தடுப்பதற்காக தற்காலிக நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளனர். இதனை மக்கள் நன்கு அறிவார்கள்.

மாகாண சபைத் தேர்தலை இலக்காக் கொண்டு இந்த கைது இடம்பெற்றுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும் பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டாம் என்று நாம் ஒருபோதும் கூறவில்லை. எனினும் இதனை விட பாரிய மோசடி சீனி மோசடியாகும். இதனை நியாயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad