கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கைதிக்கு ஹெரோயின் கொண்டு சென்றவர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கைதிக்கு ஹெரோயின் கொண்டு சென்றவர் கைது

(செ.தேன்மொழி)

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதியொருவருக்கு வழங்குவதற்காக ஆடைக்குள் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை எடுத்து சென்ற சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கைதிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த உறவினர்களை, சிறைச்சாலையில் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது கைதியொருவருக்கு வழங்கும் பொருட்டு நபரொருவர் சில ஆடைகளை எடுத்து வந்துள்ளார். அந்த ஆடைகளை சோதனை செய்துள்ள புலனாய்வு அதிகாரிகள், அதில் ஆண் காட் சட்டை ஒன்றுக்குள் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து எடுத்துவரப்பட்ட ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது பொலித்தீனைக் கொண்டு நன்கு சுருள் வடிவில் பொதி செய்யப்பட்டிருந்த, 14 சென்ரி மீட்டர் நீளமான 11 சுருள்களும், 9 சென்ரி மீட்டர் நீளமான சுருள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சுருள்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை கைது செய்த புலனாய்வு பிரிவினர், மேலதிக விசாரணைகளுக்காக அவரை பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad