அஸாத் சாலிக்கு தொடர்பு உள்ளதாக ஒரு இடத்திலேனும் குறிப்பிடவில்லை - அரசாங்கத்தின் கடும்போக்குவாதிகளை திருப்திப்படுத்தவே அவரது கைது : தேசிய ஐக்கிய முன்னணி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

அஸாத் சாலிக்கு தொடர்பு உள்ளதாக ஒரு இடத்திலேனும் குறிப்பிடவில்லை - அரசாங்கத்தின் கடும்போக்குவாதிகளை திருப்திப்படுத்தவே அவரது கைது : தேசிய ஐக்கிய முன்னணி

(எம்.ஆர்.எம்.வசீம்)

அஸாத் சாலியின் கைது சட்டவிரோதமானது, அரசாங்கத்துடன் இருக்கும் கடுப்போக்குவாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அவரது கைது அமைந்துள்ளதென தேசிய ஐக்கிய முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது கட்சியின் தலைவர் அஸாத் சாலியின் கைது சட்ட விரோதமானது என்பதையும், அது அரசாங்கத்தினதும் அதை ஆதரிக்கும் கடும் போக்கு இனவாதிகளினதும் உள்நோக்கங்களை பூர்த்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது என்பதை ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். 

அவரது சட்ட விரோத கைதானது இலங்கை அரசியல் யாப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள அவரின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றான அவரது பேச்சு சுதந்திரத்தை மீறும் ஒன்றாகும்.

அஸாத் சாலி எல்லா வகையான தீவரவாதப் போக்கையும், குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் அவ்வாறான போக்கை கடுமையாக எதிர்ப்பவர். 

ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல் குண்டுதாரிகள் மற்றும் சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் என்பனவற்றுக்கு எதிரான அவரது நிலைப்பாடு கடந்த ஆண்டுகளில் அவர் நடத்திய நூற்றுக்கணக்கான ஊடக மாநாடுகள் மூலம் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டம் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் என்பன பற்றிய அவரது கூற்று ஊடகங்களால் ஒட்டு மொத்தமாக திரிபுபடுத்தி கூறப்பட்டுள்ளன. இதனால் இந்த விடயத்தில் சுய ஆர்வம் உள்ள சிலர் அது பற்றிய முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். 

இந்த குறிப்பிட்ட ஊடக சந்திப்பின் முழுமையான ஒளிப்பதிவு மற்றும் இது சம்பந்தமான விளக்கங்கள் என்பன பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்துக்கு ஊடகங்களால் தவறான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளமை பற்றி அஸாத் சாலியும் ஒரு முறைப்பாட்டை செய்துள்ளார். 

இதன் தொடராக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தான் ஏற்கனவே கூறிய விடயங்கள் பற்றி அஸாத் சாலி தெளிவான விளக்கமொன்றையும் வழங்கி உள்ளார்.

பொலிஸ் ஊடக அறிக்கைகளின்படி அவர் (ஐ.சீ.சீ.பீ.ஆர்.) சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பனவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் உயிர்த்த ஞாயிறு சம்பவம் பற்றி ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு அந்த விடயத்தில் அஸாத் சாலிக்கு தொடர்பு உள்ளதாக ஒரு இடத்திலேனும் குறிப்பிடவில்லை என்பதை இங்கே மிக முக்கியமாக அவதானிக்க வேண்டி உள்ளது.

அஸாத் சாலி சட்டமா அதிபரின் ஆலோசனையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் அறிவித்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட ஊடக அறிக்கை மற்றும் அது சம்பந்தமான ஆவணங்கள் என்பனவற்றை ஆராய்ந்து அதன் பிரகாரம் அவரை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபரை நாம் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment