மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது - யோகேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது - யோகேஸ்வரன்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

மாகாண ஆட்சி முறையைக்கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது. மாகாண ஆட்சி முறைமையைக் கொண்டு வருவதோடு மாத்திரமல்லாது, காணி, நிதி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை. அதை இந்தியா செய்யுமென எதிர்பார்க்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் நேற்று மாலை கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, பொலிஸ், இராணுவத்துறை ஆகியவற்றில் தமிழ் மக்களை அல்லது தமிழ் பேசும் மக்களை இணைக்கின்ற விடயத்தில் மிகத்தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

ஏனெனில், எங்களுக்கிருக்கின்ற 1987ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988ம் ஆண்டு மாகாண சபை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாகாண சபை ஆட்சி முறையின் கீழ் பொலிஸ், காணி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த நிலையில், காணி அதிகாரத்தை மத்திய அரசாங்கத்தில் வைத்திருக்கிறார்கள்.

வனவிலங்கு, வனபரிபாலன, மகாவலி, தொல்பொருள் பகுதி என மத்திய அரசுக்கு கீழே காணிகளை க் கொண்டு செல்கிறார்கள். அது அவ்வாறிருக்க மறுபக்கம் பொலிஸ் அதிகாரம். இவ்வதிகாரத்தை வழங்கினால் உண்மையிலேயே தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கு மக்கள் பொலிஸாராக நியமிக்கப்பட வேண்டும். மாகாணத்திற்கு கீழே இது வரும். அதனை இல்லாமல் செய்வதற்கு தமிழ்-முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொலிஸில் சேர்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் இந்த மாகாண முறையை இல்லாமல் செய்து விடலாம்.

பொலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டியதில்லை. அது கேள்விக்குட்படுத்தப்படும் போது, தமிழர்கள் பொலிஸிலும் இராணுவத்திலும் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆகவே, அது தேவையில்லை. அதாவது, பொலிஸ், காணி அதிகாரம் வழங்கத் தேவையில்லை என்று கொண்டு வரலாம்.

இந்த நடவடிக்கைக்கு இந்த அரசாங்கம் மாகாண சபை ஆட்சி முறையிலிருக்கின்ற சில அதிகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது இப்பிரிவுகளுக்கு இணைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, இது ஐக்கிய நாடுகளுக்காக செய்யப்படும் நடவடிக்கை அல்ல.

இந்நடவடிக்கையானது, இந்த அரசாங்கம் மாகாண ஆட்சி முறையை இல்லாமல் செய்ய வேண்டும் அல்லது இந்த ஆட்சி முறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். 9 மாகாணமாக இருப்பது சில வேளை 5 மாகாணமாக மாறலாம். சில வேளைகளில் பழைய காலங்களில் இருந்ததைப் போன்று ராஜரட்டை, ருகுணுரட்டை என மூன்று பிரிவாக வரலாம் என்ற முறைமையினையும் சிந்திக்கின்றார்கள்.

மாகாண ஆட்சி முறைமை தேவையில்லை என சில கட்டத்தில் சிந்திக்கின்றார்கள். மத்திய அரசின் ஆட்சி முறைமை இருக்கட்டும். பிரதேச சபை, மாநகர சபை நகர சபையினைப் பலப்படுத்தி விடுவோம் என நினைக்கின்றார்கள்.

ஆகவே, இந்த அதிகாரங்களைப் பறிப்பதற்காகத் தான் பொலிஸ், இராணுவ அதிகாரங்களைக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும், இது செல்லுபடியற்றதாக மாறும். ஏனெனில், இந்த மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதில் நாங்கள் மிக அவசியமாக இருக்கின்றொம்.

இது சர்வதேச ரீதியாகத் தீர்க்கப்பட்ட விடயம். இலங்கை மாத்திரமல்ல. இலங்கையும் இந்தியாவும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம். சர்வதேச ஒப்பந்தம்.

இது தனியொரு நாட்டின் ஒப்பந்தமல்ல. சர்வதேச ஒப்பந்தமாகும். இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்டது தான் இந்த ஒப்பந்தம். இந்த மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது.

மாகாண ஆட்சி முறைமையைக் கொண்டு வருவதோடு மாத்திரமல்லாது, காணி, நிதி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை. அதை இந்தியா செய்யுமென எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment