மட்டக்களப்பில் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் சேவைகள் பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 8, 2021

மட்டக்களப்பில் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் சேவைகள் பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பில் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சேவைகள் பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவை மாவட்ட செயலாளர் அரசாங்க அதிபருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் இன்று (09) செவ்வாய்க்கிழமை 09.03.2021 திறந்து வைத்தார்.

சகல வசதிகளுடன் கூடிய இந்தப் பிரிவினூடாக சிறு தொழில் முயற்சியில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கான ஆலோசனைகள் வழிகாட்டல்கள் சட்ட விடயங்கள் பயிற்சிகள் இலவசமாகக் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறு தொழில், வியாபாரம் ஒன்றை புதிதாக ஆரம்பிக்க உத்தேசித்துள்ளவர்களும், தொழிலொன்றைச் செய்து வருபவர்களும் இப்பிரிவினூடாக சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் மாவட்ட செயலகத்தில் மாத்திரம் வழங்கப்பட்டு வந்த முயற்சியாண்மை அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகள், தொழிநுட்பம் புத்தாக்க விடயங்கள், நிதி ஆலோசனைகள், சந்தைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைகள், வியாபார ஆலோசனைகள், அபிவிருத்தி ஆலோசனை போன்ற 6 பிரிவுகளின் சேவைகள் அனைத்தையும் இனிமேல் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பொதுமக்கள் இலகுவாக பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் சி. வினோத், உதவிப் பிரதேச செயலாளர்களான கே. அருணன், லக்ஷன்யா பிரசாந், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரணவஜோதி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment