“அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நாட்டின் சுயாதீன நீதிமன்ற தீர்ப்புக்கு சவாலை ஏற்படுத்தி இருக்கின்றது” - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

“அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நாட்டின் சுயாதீன நீதிமன்ற தீர்ப்புக்கு சவாலை ஏற்படுத்தி இருக்கின்றது” - முஜிபுர் ரஹ்மான்

நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு சவாலை ஏற்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரிக்கு இடமளிக்க முடியாது. ஜனாதிபதியின் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு சவாலை ஏற்படுத்தி இருக்கின்றது. இது சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் சவாலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அறிக்கையின் சில பரிந்துரைகள் நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்களை சவாலுக்குட்படுத்தி இருக்கின்றது. 

ஒரு சிலரின் வழக்கு விசாரணைகள் இன்னும் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களை அரசியல் பழிவாங்கல் என்ற பெயரில் குறித்த வழக்குகளில் இருந்து ஆணைக்குழு அவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்திருக்கின்றது.

மேலும் இவ்வாறு விடுதலை செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருப்பவர்கள், உண்மையில் குற்றமற்றவர்கள் என்றால் அவர்கள் அவர்களின் குற்றமற்ற தன்மையை நீதிமன்றத்துக்கு முன் ஒப்புவிக்க முடியும். அதனை செய்யாமல் அரசியல் பழிவாங்கல் என்ற பெயரில் ஜனாதிபதி தனக்கு தேவையானவர்களை நிரபராதியாக்கிக் கொள்ள அரசியல் பழிவாங்கல் என்ற ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

அத்துடன் நீதிமன்றத்துக்கு முன்சென்று தங்களது குற்றமற்ற தன்மையை ஒப்புவிக்க முடியாதவர்களே, காட்டு ஆணைக்குழுக்களை அமைத்து, அதனூடாக விடுதலை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர். 

இவ்வாறு ஆணைக்குழு அமைத்து குற்றவாளிகள் விடுதலை பெற முடியுமாக இருந்தால், நாட்டின் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு இருக்கும் மதிப்பு என்ன? நாட்டுக்கு நீதிமன்றங்கள் தேவையில்லை. ஆணைக்குழு அமைத்து அவர்களுக்கு தேவையான தீர்ப்புக்களை பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் நாட்டின் உயர் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மை பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் நாட்டின் சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்து நீதிமன்ற சுயாதீனத்தன்மை பாதுகாக்க சட்டமா அதிபர் மற்றும் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா அல்லது காட்டு ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளுக்கு கீழ்படிவதா என கேட்கின்றோம். 

அதனால் குற்றவாளிகளை நிரபராதியாக்குவதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவே அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவாகும். எனவே ஜனாதிபதியின் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் தீர்ப்புகள் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் நாட்டின் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு சவாலை ஏற்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரிக்கு இடமளிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment