‘‘கொவிட்19 தொற்றினால் உயிரிழந்த 181 ஜனாஸாக்களின் பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டன என்பதை மாத்திரமே இப்போதைக்கு என்னால் கூற முடியும். இதற்குள் வெளியில் சொல்ல முடியாத நிறைய மறைமுகமான விடயங்கள் உள்ளன’’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இக்கருத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு போராட்டங்களின் பின்னர் சர்வதேசத்தின் தலையீட்டினாலேயே இலங்கையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமை கிடைக்கப் பெற்றுள்ளது. தனது முயற்சியாலேயே இந்த அனுமதி கிடைத்ததாக நஸீர் அஹமட் கூறுவது வெட்கத்துக்குரியதாகும்.
ஜெனீவாவில் இந்தப் பிரேரணை வந்திருக்காவிடின் ஒருபோதும் எமது உரிமைகள் கிடைத்திராது. அதனால் எனது கட்சியின் உறுப்பினர்களின் இவ்வாறான கருத்துக்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையில் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதனிடையே நஸீர் அஹமட் எம்.பி.யின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி ஜம்புரேவல சந்திரரத்ன தேரர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் நேற்று முன்தினம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.
கொவிட்டினால் உயிரிழப்பவர்களின் விடயத்தில் அரசியல்வாதிகள் தலையீடுவது செய்வது தவறான செயற்பாடு என்றும் நஸீர் அஹமட் தெரிவித்த மேற்படி விடயம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானாவும் நஸீர் அஹமட்டின் கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
Vidivelli

No comments:
Post a Comment