9ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்த சித்தார்த்தன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

9ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்த சித்தார்த்தன்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தமக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் சுகாதார தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆளுநர்கள் அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வந்த சுகாதார தொண்டர்களுக்கு ஆளுநரினால் உரிய பதில் கிடைக்காத நிலையில் நேற்று முதல் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சுகாதார தொண்டர்களை பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் கு.தர்ஷன், சாவகச்சேரி முன்னாள் நகர சபை உறுப்பினர் கிசோர் ஆகியோரும் சென்றிருந்தனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்து வரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் போராட்டம் 9 வது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக,சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர், தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றியதாகவும் ஆகவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment