விடுதியொன்றில் 5 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு - நால்வர் கைது, முன்னாள் இராணுவ உறுப்பினர் தப்பியோட்டம் - விசேட அமைப்புடன் தயார் செய்யப்பட்ட பஸ் கைப்பற்றல் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

விடுதியொன்றில் 5 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு - நால்வர் கைது, முன்னாள் இராணுவ உறுப்பினர் தப்பியோட்டம் - விசேட அமைப்புடன் தயார் செய்யப்பட்ட பஸ் கைப்பற்றல்

அநுராதபுரம், இசுறுபுர பிரதேசத்தில் உள்ள ஒரு தங்குமிட விடுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபா. 5 கோடிக்கும் அதிக பெறுமதியான 348 கிலோ கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கெக்கிராவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்றிரவு (17) குறித்த விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகநபர்கள் நால்வரை கைது செய்துள்ளனர்.

சுமார் 200 பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த கேரள கஞ்சாவை கெக்கிராவ பொலிஸார் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கேரள கஞ்சா பொதிகள், தணமல்வில பிரதேசத்திலிருந்து அநுராதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சுற்றிவளைப்பில், தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த செல்வந்தர்களில் ஒருவர், அவரது உதவியாளர்கள் இருவர், குறித்த விடுதியின் உரிமையாளர் ஒருவர் ஆகிய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் விற்பனை தொடர்பில் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட, 'கஞ்சா மேஜர்' என அழைக்கப்படும் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட சந்தேகநபர், இச்சுற்றிவளைப்பின்போது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதற்கமைய குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சந்தேகநபர், கடந்த 2014ஆம் ஆண்டு சுமார் 35 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதோடு, மீண்டும் கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் கஞ்சா கடத்திய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கஞ்சாவை பொதியிடுவதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரமொன்றும், இலத்திரனியல் தராசொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, போதையை அதிகரிப்பதற்காக பயன்படுத்திய ஒரு வகை இராசாயனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன், கஞ்சாவை கடத்துவதற்காக விசேடமான அமைப்புடன் தயார் செய்யப்பட்ட பஸ் ஒன்றையும் மீட்டுள்ள பொலிஸார், அதிலிருந்தும் 18 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரூபா. 8 இலட்சம் பணம் ஆகியனவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள், இந்தியாவின் கேரளாவிலிருந்து படகு வழியாக தலைமன்னார் ஊடாக அநுராதபுரத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad