"ஸஹ்ரானுடன் தொடர்பு" : நளின் பண்டாரவுக்கு எதிராக சுரேஷ் சாலி முறைப்பாடு - 4 கருத்துக்கள் தொடர்பில் CID யினர் விசாரணைகள் முன்னெடுப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

"ஸஹ்ரானுடன் தொடர்பு" : நளின் பண்டாரவுக்கு எதிராக சுரேஷ் சாலி முறைப்பாடு - 4 கருத்துக்கள் தொடர்பில் CID யினர் விசாரணைகள் முன்னெடுப்பு

தனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமுக்கும் தொடர்பு இருப்பதாக, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சாலி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு (CID) விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், நேற்று (18) சுரேஷ் சாலி, சட்டத்தரணி ஊடாக, எழுத்து மூலம் CID யில் முறைப்பாடு செய்திருந்ததோடு, இன்று (19) அது தொடர்பில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

குருணாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான, நளின் பண்டார நேற்று முன்தினம் (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறிப்பாக, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தொடர்பில் அவர் தெரிவித்த 4 கருத்துகளை அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியனா ஸஹ்ரான் ஹாசிமை மலேசியாவில் சுரேஷ் சாலி சந்திதித்தாக தெரிவிப்பு.

ஸஹ்ரான் ஹாசிமுக்கு மலேசியா, இந்தோனேஷியா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு செல்ல சுரேஷ் சாலி உதவி செய்ததாக தெரிவிப்பு.

இந்தியாவில் பயிற்சிக்காக சென்றிருந்த சுரேஷ் சாலி, அதனை முழுமையாக பூர்த்தி செய்யாமல் இடைநடுவிலேயே நாடு திரும்பியதாக தெரிவித்தமை.

இவ்வனைத்து விடயங்களும் தெரிந்த சுரேஷ் சாலி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவில்லை எனத் தெரிவித்தமை.

இவ்வாறு நளின் பண்டார தெரிவித்துள்ள அனைத்து விடயங்களும் உண்மைக்கு புறம்பானவை எனவும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டதன் மூலம், மலே இனத்தவரான தான், தனிப்பட்ட ரீதியிலும் சட்ட ரீதியிலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக, சுரேஷ் சாலி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இவ்விடயங்கள் காரணமாக, குறித்த தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் தம் மீதும், தனது குடும்பத்தார் மீதும் விரோதமான பார்வையைச் செலுத்தும் நிலை ஏற்படும் என தான் நம்புவதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரச புலனாய்வு பிரிவின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, அதன் பிரதிபிம்பத்திற்கு இழுக்கு ஏற்படும் எனவும் அவர் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் முன்னிலையில் 3 முறை வாக்குமூலம் வழங்கியுள்ளாகவும், அது தொடர்பான வெவ்வேறு விடயங்கள் தொடர்பில் 6 முறை அங்கு சென்றுள்ளதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஸஹ்ரான் ஹாசிமை சந்திக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே நளின் பண்டாரவின் கருத்து முற்றிலும் பொய்யானது எனவும், இது இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் விடயமாக அமையும் என்பதால் இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனவே இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க, CID யினர் தீர்மானித்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, CID யின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குழுவொன்றினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட பதிவுகள், அதற்கு வழங்கப்பட்ட பின்னூட்டங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad