மத்திய மாகாணத்தில் மாதாந்தம் 22 இலட்சம் கன மீற்றர் குழாய் நீர் விரயம் - உதவிப் பொது முகாமையாளர் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

மத்திய மாகாணத்தில் மாதாந்தம் 22 இலட்சம் கன மீற்றர் குழாய் நீர் விரயம் - உதவிப் பொது முகாமையாளர்

நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையால் விநியோகிக்கப்படும் நீரில் மத்திய மாகாணத்தில் மாதம் தோறும் சுமார் 22 இலட்சம் கன மீற்றர் குழாய் நீர் வீணாகுவதாக உதவிப் பொது முகாமையாளர் ஜே.எச். மீகொட தெரிவித்தார்.

கண்டி, கெட்டம்பே நீர் வழங்கல் மத்திய நிலைய காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்தாவது மத்திய மாகாணத்தில் நீர் விநியோக வடிகால் அமைப்பு சபையினால் விநியோகிக்கப்படும் குழாய் நீரில் சுமார் 25 சதவீதம் வீண் விரயமாவதாகவும், அதனை 15 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

மத்திய மாகாணத்தில் மட்டும் நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகால் அமைப்பு சபையால் விநியோகிக்கப்படும் நீரில் மாதாந்தம் சுமார் 22 இலட்சம் கன மீற்றர் குழாய் நீர் விரயமாகின்றது.

கடந்த மாதத்தில் மத்திய மாகாணத்தில் 7286027 கன மீற்றர் நீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5085479 கன மீற்றர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீர் வடிகால் அமைப்பு சபையால் வினியோகிக்கப்படும் நீர் பிரதான குழாய் வழியாகச் சென்று வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் நீரை அளவீட்டு மீட்டரை அடைவதற்கு முன்பு பாதிவழியில் வீணடிக்கப்படுகிறது.

அதனால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செல்ல முன் வீணாகும் நீர் இந்த கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை. மத்திய மாகாணத்தில் நீர் விநியோக சபையினால் விநியோகிக்கப்படும் குழாய் நீரில் சுமார் 25% வீணடிக்கப்படுகின்றது, எனவே இதை 15% ஆகக் குறைக்க ஒரு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1000 லீற்றர் தண்ணீரை உற்பத்தி செய்ய நீர் விநியோக சபைக்கு ரூபா 49.00 செலவாகிறது, இருப்பினும் மாத்தளை மாவட்டத்தில் மட்டும் மொத்த நீர் கொள்ளவில் 35 சதவீதநீர், குழாய்களின் குறைபாடு காரணமாக வீணடிக்கப்படுவதாக அவர் கூறினார்.

(எம்.ஏ.அமீனுல்லா)

No comments:

Post a Comment

Post Bottom Ad