நீதிமன்ற கட்டமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 20 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - நீதியமைச்சர் அலி சப்ரி - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

நீதிமன்ற கட்டமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 20 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - நீதியமைச்சர் அலி சப்ரி

நீதிமன்ற கட்டமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்த வருடத்தில் 20 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை நீதிமன்ற கட்டமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையின்போது நீதிமன்றத்தின் நீதிபதிகள், சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ள நீதியமைச்சர், அந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறைவு பெறும் வரை அவர்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

கல்கிஸ்சை நீதிமன்றத் தொகுதியில் நிலவும் தேவைகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நீதியமைச்சர் அலி சப்ரி அங்கு நீதிபதிகள் மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நான்கு வருடங்களில் நீதிமன்ற கட்டமைப்பு டிஜிட்டல் முறைப்படுத்தப்படும் என்றும் அதற்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதேவேளை எதிர்காலத்தில் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கான செயற்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பிலும் அங்கு அவர் கலந்துரையாடியுள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad