போதைப் பொருள் பரிமாற்றம் அதிகமாக இடம்பெறும் பகுதியாக மாற்றம் பெற்றுள்ள தென் மாகாணம் - வெளிநாடுகளிலிருந்து செயற்பட்ட 13 சந்தேகநபர்கள் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

போதைப் பொருள் பரிமாற்றம் அதிகமாக இடம்பெறும் பகுதியாக மாற்றம் பெற்றுள்ள தென் மாகாணம் - வெளிநாடுகளிலிருந்து செயற்பட்ட 13 சந்தேகநபர்கள் கைது

(எம்.மனோசித்ரா)

மாத்தறை குற்ற விசாரணை பிரிவினரால் இன்று புதன்கிழமை 68 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் 74 கிலோ கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மாத்தறை குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று அதிகாலை தெய்சந்தர பொலிஸ் பிரிவில் - தெனகம பிரதேசத்தில் முலடியன வீதியில் மோட்டார் சைக்கிளொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஹெரோயின் போதைப் பொருள் மீட்க்கப்பட்டதோடு, தொடர்ந்தும் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 68 பொதிகளில் மேலுமொரு தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு 68 பொதிகளிலிருந்து 74 கிலோ 975 கிராம் ஹெரோயின் மீட்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது 29 வயதுடைய நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஆணொருவரும், 38 வயதுடைய கண்டி - சுதுஹூம்பொல பிரதேசத்தை சேர்ந்த பெண்னொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த சந்தேகநபர்கள் இருவரும் போதைப் பொருளை கொண்டு செல்பவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையில் இது இரண்டாவது பாரிய தொகையாகும்.

இப்பிரதேசங்களில் கண்டு பிடிக்கப்படும் போதைப் பொருட்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெலிகம பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் தற்போது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் ஹரக்கட்டா எனப்படும் ருவன் நதுன் சிந்தக என்பவர் என்று இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இவர் ஏதேனுமொரு நாட்டிலிருந்து இவ்வாறு போதைப் பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.

கண்டியிலும், நீர்கொழும்பிலும் உள்ள இவ்விரு சந்தேகநபர்களும் எவ்வாறு தொடர்புகளைப் பேணியுள்ளனர் என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணம் போதைப் பொருள் பரிமாற்றம் அதிகமாக இடம்பெறும் பகுதியாக மாறியுள்ளது. குறிப்பாக மாத்தறை, வெலிகம, மிதிகம, இமதுவ மற்றும் கந்தர ஆகிய பகுதிகளில் அண்மையில் அதிகளவான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. மாத்தறை குற்ற விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி வெலிகம பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 111 கிலோ கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டார்.

இதேபோன்று கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ஹொரணையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 45 கிலோ கிராம் ஹெரோயினுடன் இராணுவ சிப்பாயொருவரும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த ஹெரோயின் தொகை வெலிகம - மிதிகம பிரதேசத்தில் 18 ஏக்கர் நிலத்தில் மறைத்து வைத்திருந்து பின்னர் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இன்று கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையும் குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு பின்னர் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஹரக்கட்டா எனப்படும் போதைப் பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபரின் சகாவான ஹைபிரிட் சுரங்க எனப்படும் சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் பதிவு செய்யபட்ட இயந்திரங்கள் இந்தியாவில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்களை வழங்குமாறு இந்திய பொலிஸ் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே அது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அருகில் போதைப் பொருளுடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுப்பர்.

கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு இலங்கையில் போதைப் பொருள் செயற்பாடுகளில் ஈடுபட்ட 13 சந்தேகநபர்கள் நாட்டுக்கு வந்த போது இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் மேலும் சிலர் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை கைது செய்வதற்கான நடவக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2 கிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப் பொருள் மரண தண்டனை வழங்கப்படக் கூடிய குற்றமாகும். எனவே இவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad